மேற்கு வங்காள தேர்தல் வன்முறையில் 14 பா.ஜ.க. தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; ஒரு லட்சம் பேர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர்; பா.ஜ.க. தலைவர் நட்டா குற்றச்சாட்டு
மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையில் 14 பா.ஜ.க. தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர் என்று பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார்.
நட்டா சுற்றுப்பயணம்
மேற்கு வங்காள மாநிலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கான வீடுகள் சூறையாடப்பட்டன. இ்ந்நிலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, மேற்கு வங்காளத்தில் நேற்று முன்தினம் முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, தாக்கப்பட்ட பா.ஜ.க. கட்சித் தொண்டர்கள் சிலரின் வீடுகளுக்குச் சென்று அவர் பார்வையிட்டார்.
மம்தாவின் அமைதி
பின்னர் கொல்கத்தாவில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய கொடூரக் கொலைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பா.ஜ.க. தொண்டர்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு உள்ளனர், பாலியல் வன்முறைக்கு உள்ளாகி இருக்கின்றனர்.இந்த விவகாரத்தில் மம்தாவின் அமைதி, அவரது தொடர்பை காட்டுகிறது. அவரின் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளது.மாநில அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்ட வன்முறையால், 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story