மாநிலங்களுக்கு 34.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு தகவல்


மாநிலங்களுக்கு 34.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 6 May 2021 12:26 AM GMT (Updated: 6 May 2021 12:26 AM GMT)

மாநிலங்களுக்கு 34.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் தீவிரமாகத் தொடரும் நிலையில், இத்தொற்றுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தேவை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தை மத்திய ரசாயன மற்றும் உரத்துறை மந்திரி சதானந்த கவுடா நேற்று டெல்லியில் தலைமை தாங்கி நடத்தினார்.

அப்போது அவர், கடந்த ஏப்ரல் 21-ந் தேதி முதல் மாநிலங்களுக்கு 34.5 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாக சதானந்த கவுடா தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்வது ஒரு பெரிய செயல்பாடு. வரும் வாரங்களில் இதன் வினியோகத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தித் திறனை அதன் உற்பத்தியாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் சதானந்த கவுடா தெரிவித்தார். மற்ற அத்தியாவசிய மருந்துகளின் இருப்பையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், பதுக்கி வைத்தல், கள்ளச்சந்தை விற்பனையை தடுக்கவேண்டும் என்றும் கூட்டத்தின்போது அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தலைவர் டாக்டர் வி.ஜி.சோமானி, அத்தியாவசிய மருந்துகளின் பதுக்கல், கள்ளச்சந்தை விற்பனையை தடுக்க குழுக்களை அமைத்து கள ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மாநில மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், பதுக்கல், கள்ளச்சந்தை விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

Next Story