ஆதார் பூனவல்லா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி பம்பாய் ஐகோர்ட்டில் மனு தாக்கல்
ஆதார் பூனவல்லா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி பம்பாய் ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பேரழிவு தரும் இரண்டாவது அலையை எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கிறது. இதனிடையே நாடு முழுவதும் 18-44 வயதினருக்கு மே 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில் 18-44 வயதினருக்குத் தேவையான தடுப்பூசிகள் இன்னும் தங்களிடம் வந்தடையவில்லை என்று தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது.
இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பூசி தயாரித்து உலகம் முழுவதும் வினியோகம் செய்கிறது. இதனிடையே இந்தியாவில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்பதில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்திருந்தார். தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனுக்கு செல்ல அவர் முடிவெடுத்ததற்கு, அவருக்கு கொடுக்கப்பட்ட இந்த அழுத்தம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆதார் பூனவல்லா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி பம்பாய் ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆதார் பூனவல்லா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அச்சுறுத்தல்களை மனதில் வைத்து ஊடக அறிக்கையின்படி, இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், அவரின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ஆதார் பூனவல்லா கூறும்போது, “இந்தியாவில் சில மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும். ஜூலை மாதம் முதல் தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். ஜூலை மாதத்தில் 100 மில்லியன் வரை தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
Related Tags :
Next Story