ஊரடங்கின் போது வெளிமாநில தொழிலாளர்கள் திரண்டது குறித்து வலைத்தளத்தில் பதிவிட்ட பெண்ணுக்கு எதிரான வழக்கு ரத்து; மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
ஊரடங்கின் போது வெளிமாநில தொழிலாளர்கள் திரண்டது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட பெண் மீதான வழக்கை ரத்து செய்ய மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வழக்குப்பதிவு
நவிமும்பையை சேர்ந்தவர் சுனைனா ஹோலி. இவரை டுவிட்டரில் ஆயிரக்கணக்கானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் கடந்த ஆண்டு ஊரடங்கின் போது, பாந்திரா டெர்மினஸ் அருகில் அதிகளவில் வெளிமாநில தொழிலாளர்கள் திரண்ட சம்பவம் குறித்து டுவிட்டரில் பதிவு போட்டு இருந்தார். இதில் சுனைனா ஹோலி இருசமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனா்.இந்தநிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சுனைனா ஹோலி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
ரத்து செய்ய உத்தரவுஇந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்ேட, எம்.எஸ்.கார்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. விசாரணையின் போது அரசு தரப்பு வக்கீல், சுனைனா ஹோலி டுவிட்டரை கையாள்வதில் கைதேர்ந்தவர் எனவும், அவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்ந்து வருவதாகவும் கூறினார்.
மனுதாரர் தரப்பில், சுனைனா ஹோலி அவரது டுவிட்டர் பதிவில் எந்த மதத்தினரையும் குறிப்பிடவில்லை, மேலும் அவரது பதிவால் எந்த அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் மனுதாரரின் டுவிட்டர் பதிவில் எந்த குறிப்பிட்ட மதத்தினரையும் குறிப்பிடவில்லை, மேலும் சமூகத்தில் எந்த மோதலையும் ஏற்படுத்தவில்லை என கூறி சுனைனா ஹோலிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டனர்.
இதேபோல சுனைனா ஹோலி மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையும் தனித்தனியாக நடக்கும் என ஐகோர்ட்டு கூறியுள்ளது.