மணமக்கள் போல் உடை உடுத்தி, மாலை அணிவித்து திருமணம் செய்த தவளைகள்


மணமக்கள் போல் உடை உடுத்தி, மாலை அணிவித்து திருமணம் செய்த தவளைகள்
x
தினத்தந்தி 6 May 2021 11:19 AM IST (Updated: 6 May 2021 11:33 AM IST)
t-max-icont-min-icon

திரிபுராவில் மழை வேண்டி மணமக்கள் போல் உடை உடுத்தி, மாலை அணிவித்து தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு உள்ளது.

அகர்தலா,

கோடை காலம் தொடங்கி, சூரிய வெப்பம் அதிகரிக்கும் அக்னி நட்சத்திர காலம் நடந்து வரும் வேளையில் மக்கள் பல்வேறு இடங்களிலும் வறட்சியை சந்தித்து வருகின்றனர்.  மழை நீருக்காக காத்திருக்கின்றனர்.

தமிழகத்தின் சில பகுதிகளில் கோடை மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.  எனினும், வடமாநிலங்களில் வெயில் வாட்டி வருகிறது.  இந்நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் மழை வேண்டி மக்கள் வினோத நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளனர்.

நம்மூரில் மழை பொழிய கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் உண்டு.  இதேபோன்று திரிபுராவில் இரண்டு தவளைகளை பிடித்து வந்து திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

இதற்காக தவளைகளை தேர்வு செய்து நீரில் குளிக்க வைத்து, மணமக்கள் போன்று வேஷ்டி, சேலை மற்றும் மாலைகளும் அணிவித்து உள்ளனர்.  பூ, பழம் போன்ற பொருட்களை வைத்து திருமண சடங்குகளையும் நடத்தியுள்ளனர்.

இதன்பின் வேஷ்டியணிந்த மணமகன் தவளையை கொண்டு, சேலை அணிந்த மணமகள் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டு உள்ளனர்.  இதனால் மழை கடவுள் மனம் மகிழ்ந்து நாட்டில் மழை பொழியும் என்ற நம்பிக்கையில் இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டு உள்ளது.


Next Story