தேர்தலில் அ.தி.மு.க வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மக்கள் பணி தொடரும்; புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பேட்டி


தேர்தலில் அ.தி.மு.க வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மக்கள் பணி தொடரும்; புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பேட்டி
x
தினத்தந்தி 7 May 2021 9:28 AM IST (Updated: 7 May 2021 9:28 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் (கிழக்கு) கட்சி அலுவலகத்தில் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தாலும் மக்கள் பணி தொடரும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் கூறினார்.

மகத்தான வெற்றி

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி அரசுக்கு மாற்று சத்தியாக கடந்த 5 ஆண்டு காலமாக அ.தி.மு.க. சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் செயல்பட்டு வந்தது. சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டோம். கடந்த கால காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாட்டிற்கு சரியான பாடத்தை புகட்டும் விதமாக எங்கள் கூட்டணிக்கு மக்கள் மகத்தான வெற்றியை தேடி தந்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமிக்கு அ.தி.மு.க. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ரங்கசாமி தலைமையில் கூட்டணி அரசு புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காகவும், மாநில மக்களின் நலன் சார்ந்த எண்ணங்களை பூர்த்தி செய்யும் அரசாக இருக்கும். கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற முன்னுரிமை அளித்து நிவாரணப்பணிகளிலும், நிவாரண உதவிகளையும் கூட்டணி அரசு செய்யும்.

துணை நிற்போம்

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் போலி மதசார்பின்மை, துரோகம் இவைகளால் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். கடந்த சட்டசபையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது மக்களுக்கு தெரியும். வெற்றிவாய்ப்பை நாங்கள் இழந்தாலும், மக்களுக்கு ஜனநாயக கடமை ஆற்றுவதிலிருந்து நாங்கள் தவறமாட்டோம். புதியதாக அமைய இருக்கும் ஆட்சிக்கு நாங்கள் துணை நிற்போம். நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாக 3 கட்சிகளின் தலைமைகள் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story