சட்டமன்ற தேர்தலிகளில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு குறித்து சோனியா காந்தி அதிருப்தி


சட்டமன்ற தேர்தலிகளில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு குறித்து சோனியா காந்தி அதிருப்தி
x
தினத்தந்தி 8 May 2021 12:40 AM IST (Updated: 8 May 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மிகவும் ஏமாற்றமளிப்பதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைத் தேர்தல்கள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதில் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. புதுச்சேரியில் ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை.

கேரளா, அசாம் மாநிலங்களிலும் தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ், தமிழகத்தில் மட்டும் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து 18 சட்டசபை தொகுதி, ஒரு மக்களவை தொகுதியில் (நாகர்கோவில்) வெற்றி பெற்றது. இந்நிலையில், தேர்தலுக்கு பின்னரான காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கேரளாவில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் துரதிர்ஷ்டவசமாக, நமது கட்சியின் செயல்பாடுகள் மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக கட்சியின் செயற்குழு விரைவில் கூடுகிறது. இந்தப் பின்னடைவில் இருந்து ஒரு கட்சியாக, நமது எம்பிக்கள் பணிவு மற்றும் நேர்மையுடன் உரிய படிப்பினைகளை பெற்றுக் கொள்ளவேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Next Story