தனியார் ஆய்வகங்களில் இருந்து மாதிரி பெற்று கொரோனா பரிசோதனை: அரசு ஆஸ்பத்திரி ஆய்வக ஊழியர்கள் உள்பட 4 பேர் கைது
தனியாா் ஆய்வகங்களில் இருந்து மாதிரி பெற்று கொரோனா பரிசோதனை செய்து கொடுத்து வந்த அரசு ஆஸ்பத்திரி ஆய்வக ஊழியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
தனியாா் ஆய்வகங்களில் இருந்து மாதிரி பெற்று கொரோனா பரிசோதனை செய்து கொடுத்து வந்த அரசு ஆஸ்பத்திரி ஆய்வக ஊழியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 பேர் கைது
பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில், எலகங்காவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தனியார் ஆய்வகங்களிடம் இருந்து மாதிரியை பெற்று கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதாக புகார்கள் வந்தது.
இதையடுத்து, எலகங்கா அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆய்வகத்தில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆஸ்பத்திரியில் ஆய்வக ஊழியர்களாக பணியாற்றும் 3 பேர் மற்றும் தனியார் மருத்துவமனையின் நிர்வாகி ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
முறைகேடாக பரிசோதனை
விசாரணையில், அவர்கள் பெயர் பத்மநாத், பாபிரெட்டி, புனித் மற்றும் சதீஸ் என்பது தெரியவந்தது. இவர்களில் சதீஸ் தவிர மற்ற 3 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வக ஊழியர்களாக பணியாற்றுகிறார்கள். இவர்கள் 3 பேரும் சதீசிடம் இருந்து தனியார் ஆய்வகங்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக வரும் மாதிரிகளை பெற்று, அவற்றை சோதனை நடத்தி அறிக்கை கொடுத்து வந்துள்ளனர். இதற்காக ஒரு மாதிரிக்கு ரூ.100 பெற்று வந்துள்ளனர்.
தினமும் தனியார் ஆய்வகங்களிடம் இருந்து 40 மாதிரிகளை பெற்று, அரசு ஆஸ்பத்திரி உபகரணங்களை பயன்படுத்தி சோதனை நடத்தி, இதற்கான பணம் வாங்கி வந்ததும் தெரியவந்துள்ளது.
பணம் சம்பாதிக்கும் ஆசையில் இவ்வாறு 4 பேரும் ஈடுபட்டது தெரிந்தது. கைதான 4 பேர் மீதும் எலகங்கா போலீசாா் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story