வைகாசி மாத பூஜை நாட்களில் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து - திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல்
வைகாசி மாத பூஜை நாட்களில் சபரிமலை தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி திறக்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார். 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
கடந்த மாதம் மாத பூஜையையொட்டி கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுகளுடன் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மாநிலம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) முதல் கேரள அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
முதல் கட்டமாக வருகிற 16-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது. 18-ந் தேதிக்கு பிறகு, புதிய அரசு பதவி ஏற்ற பிறகு ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் சபரிமலை தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story