ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது கொரோனா உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஆஸ்திரேலிய அரசும், மக்களும் அளித்து வரும் உதவிகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இந்த உரையாடலின்போது உலக அளவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளுக்கு மலிவான விலை மற்றும் சமமான அணுகலை உறுதி செய்வதன் அவசியத்தை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
ஆஸ்திரேலிய பிரதமருடனான உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில், ‘கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஆதரவு மற்றும் உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக எனது நண்பர் ஸ்காட் மாரிசனுடன் பேசினேன். அப்போது கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கு சமமான அணுகல் மற்றும் மலிவுக்கான சாத்தியமான முன்முயற்சிகளை குறித்தும் விவாதித்தோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
பிராந்திய பிரச்சினைகள் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்காக ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story