இந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா; 3,915 பேர் பலி


இந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா; 3,915 பேர் பலி
x
தினத்தந்தி 8 May 2021 12:04 AM GMT (Updated: 8 May 2021 12:04 AM GMT)

இந்தியாவில் கொரோனா பரவல் தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஒரே நாளில் நேற்று 4.14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமும் புதிய உச்சம்

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தொடர்ந்து வேகமாக தாக்கி வருகிறது. தினமும் புதிய உச்சத்தை கொரோனா பாதிப்பு பதிவு செய்து வருகிறது.இந்த வகையில் நேற்றுமுன்தினம் 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இது மேலும் அதிகரித்து, காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 14 லட்சத்து 91 ஆயிரத்து 598 ஆகி உள்ளது.

நேற்று புதிதாக பாதிப்புக்குள்ளானவர்களில் 71.81 சதவீதத்தினர் மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகம், கேரளா, பீகார், மேற்கு வங்காளம், தமிழகம், ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

3,915 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்று நோயில் இருந்து மீள்வதற்காக நாடெங்கும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் நேற்று ஒரே நாளில் 3,915 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.இதனால் மொத்த பலி, 2 லட்சத்து 34 ஆயிரத்து 83 ஆக அதிகரித்து உள்ளது.நேற்றும் வழக்கம்போல அதிகபட்ச இறப்புகளை மராட்டியம் பதிவு செய்து இருக்கிறது. அங்கு 853 பேர் இறந்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் 350 பேர், டெல்லியில் 335 பேர், கர்நாடகத்தில் 328 பேர், சத்தீஷ்காரில் 212 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஆனாலும் நேற்று அருணாசல பிரதேசம், தத்ராநகர் ஹவேலி டாமன்தியு, லடாக், மிசோரம் ஆகியவை கொரோனா உயிர்ப்பலியில் இருந்து தப்பி இருக்கின்றன.இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் தொடர்ந்து 1.09 சதவீதமாக உள்ளது.

3.31 லட்சம் பேர் மீட்பு

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீட்கப்படுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிப்பது சற்றே ஆறுதல் அளிக்கும் அம்சமாகும். நேற்று முன்தினம் 3 லட்சத்து 29 ஆயிரத்து 113 பேர் மீட்கப்பட்டனர். நேற்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 3 லட்சத்து 31 ஆயிரத்து 507 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.இதுவரை நாட்டில் 1 கோடியே 76 லட்சத்து 12 ஆயிரத்து 351 பேர் கொரோனாவில் இருந்து வெற்றிகரமாக மீண்டு இருக்கிறார்கள்.

நேற்று மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 63 ஆயிரத்து 842 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம், 81.95 சதவீதம் ஆகும்.

36.45 லட்சம் பேர் சிகிச்சை

நேற்றும் புதிதாக 78 ஆயிரத்து 766 பேர் கொரோனாவில் இருந்து மீள்வதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இவர்களையும் சேர்த்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாட்டின் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 36 லட்சத்து 45 ஆயிரத்து 164 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 16.96 சதவீதம் ஆகும்.

அதிகபட்ச எண்ணிக்கையாக மராட்டிய மாநிலத்தில் மட்டுமே 6 லட்சத்து 41 ஆயிரத்து 281 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். குறைந்த பட்ச எண்ணிக்கையாக அந்தமான் நிகோபாரில் 225 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

10 மாவட்டங்கள்

சிகிச்சையில் இருப்போர் 81.04 சதவீதத்தினர் மராட்டியம், கர்நாடகம், கேரளா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, குஜராத், தமிழகம், சத்தீஷ்கார், மேற்கு வங்காளம், அரியானா, பீகார் ஆகிய 12 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

மொத்தம் சிகிச்சை பெறுவோரில் நான்கில் ஒரு பங்கினர் பெங்களூரு, புனே, டெல்லி, ஆமதாபாத், எர்ணாகுளம், நாக்பூர், மும்பை, கோழிக்கோடு, ஜெய்ப்பூர், தானோ ஆகிய 10 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் 18 லட்சத்து 26 ஆயிரத்து 490 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் 29 கோடியே 86 லட்சத்து 1,699 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

 


Next Story