புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் பா.ஜ.க.வுக்கு துணை முதல்வர் உள்பட 3 அமைச்சர்கள்; மத்திய மந்திரி கிஷண்ரெட்டி தகவல்
புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் துணை முதல்வர் உள்பட 3 அமைச்சர் பதவி இடங்களில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் என மத்திய மந்திரி கிஷண்ரெட்டி கூறினார்.
ரங்கசாமிக்கு வாழ்த்து
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்த அரசின் முதல்-அமைச்சராக ரங்கசாமி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் மத்திய உள்துறை இணை மந்திரி கிஷண்ரெட்டி, பா.ஜ.க.வின் தமிழக தலைவர் எல்.முருகன், புதுவை மாநில பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, நிர்மல்குமார் சுரானா, மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் ஆகியோர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பதவி ஏற்பு விழா முடிந்ததும் மத்திய உள்துறை இணை மந்திரி கிஷண்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
தலா 3 அமைச்சர்கள்புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி சுமூகமாக ஆட்சி நடத்தும். மக்களுக்கு தேவையானதை மத்திய அரசு உதவியுடன் நிறைவேற்றுவோம். பா.ஜ.க.வுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி உள்பட 3 அமைச்சர் பதவிகளும், என்.ஆர்.காங்கிரசுக்கு 3 அமைச்சர் பதவிகளும் கிடைக்கிறது. இன்னும் சில நாட்களில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ளது. புதிய அமைச்சர்கள் விரைவில் பதவி ஏற்க உள்ளனர். அடுத்ததாக தெலுங்கானாவில் ஆட்சியை பிடிப்பதற்கான வியூகத்தை வகுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
துணை முதல்-அமைச்சர்புதுவை மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை முதல்-அமைச்சர் மற்றும் 5 அமைச்சர்கள் பதவியே நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் இந்த முறை பா.ஜ.க.வின் முயற்சியினால் முதன்முறையாக துணை முதல்-அமைச்சர் பதவி உருவாக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கூடுதலாக ஒரு அமைச்சர் பதவியும் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.