உத்தர பிரதேசத்தில் காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள்; 4 மணிநேரம் மூச்சு திணறி உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் விளையாடி கொண்டிருந்த 4 குழந்தைகள் திடீரென காருக்குள் சென்று சிக்கி மூச்சு திணறி உயிரிழந்து உள்ளனர்.
பாக்பத்,
உத்தர பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் சண்டிநகர் பகுதிக்கு உட்பட்ட சிங்கோலி தகா என்ற கிராமத்தில் வீடு ஒன்றின் வெளியே ராஜ்குமார் என்பவரது கார் நிறுத்தப்பட்டு இருந்தது.
அண்டை வீடுகளில் வசித்து வந்த சிறுவர்கள் சிலர் அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்துள்ளனர். இதன்பின் காருக்குள் சென்ற அவர்களில் 5 பேர் தொடர்ந்து விளையாடினர். கார் தானியங்கி முறையில் பூட்டி கொள்ள கூடியது.
இதனால் கார் பூட்டி கொண்டது. சிறுவர்கள் அதற்குள் சிக்கி கொண்டனர். விளையாடி கொண்டிருந்த சிறுவர்களால் காரை விட்டு வெளியே வரமுடியவில்லை. ஏறக்குறைய 4 மணிநேரத்திற்கும் மேல் காரில் இருந்த அவர்களில் 4 சிறுவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டதில் உயிரிழந்து விட்டனர். சிறுவர்களில் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. உயிரிழந்த 4 பேரில் 2 பேர் சிறுவர்கள். 2 பேர் சிறுமிகள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story