பெங்களூருவில் துணிகரம் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ.90 லட்சம் கொள்ளை மர்மநபர்களை போலீஸ் தேடுகிறது
பெங்களூருவில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ.90 லட்சம் ரொக்கம், தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் ரூ.90 லட்சம் ரொக்கம், தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
பெங்களூரு பாகலகுன்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் மஞ்சுநாத். இவர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஆவார். கொரோனா ஊரடங்கு காரணமாக மஞ்சுநாத் தன்னுடைய குடும்பத்தினருடன் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
கடந்த சில நாட்களாக மஞ்சுநாத் அங்கேயே தங்கி இருந்தார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள், மஞ்சுநாத்தின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று விட்டனர். வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், சிந்தாமணியில் உள்ள மஞ்சுநாத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
ரூ.90 லட்சம் ரொக்கம்
உடனே அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது ரூ.90 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. அந்த பணத்தை தனது பேரனின் உயர் படிப்புக்காக கட்டணம் செலுத்த மஞ்சுநாத் வைத்திருந்தது தெரியவந்தது.
இதுபற்றி நன்கு அறிந்த நபர்களே கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாகலகுன்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மா்மநபர்களை தேடிவருகிறார்கள்.
---
Related Tags :
Next Story