வறுமையின் காரணமாக சாலைகளில் சாக்ஸ் விற்ற சிறுவனுக்கு உதவிய பஞ்சாப் முதல்-மந்திரி


வறுமையின் காரணமாக சாலைகளில் சாக்ஸ் விற்ற சிறுவனுக்கு உதவிய பஞ்சாப் முதல்-மந்திரி
x
தினத்தந்தி 8 May 2021 9:49 PM IST (Updated: 8 May 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப்பில் குடும்ப வறுமையின் காரணமாக தந்தையின் தொழிலை செய்து வந்த சிறுவனை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் படி அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 10 வயது சிறுவன் ஒருவன் டிராப்பிக் சிக்னல்களில் சாக்ஸ் விற்று வந்து இருக்கிறான். வான்ஷ் சிங் என்னும் அந்த சிறுவனின் தந்தை பரம்ஜித்தும், ஒரு சாக்ஸ் வியாபாரிதான். தாய் ராணி, இல்லத்தரசி. வான்ஷுக்கு மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு மூத்த சகோதரர் இருக்கின்றனர். 

வாடகை வீட்டில் இத்தனை பேரும் வசித்து வருகின்றனர். குடும்ப வறுமையின் காரணமாக தந்தையின் தொழிலை அந்த சிறுவன் செய்து வந்திருக்கிறார். 

சில நாட்களுக்கு முன் சிறுவன் வான்ஷ் சிங் சாக்ஸ் விற்பதை கண்ட வழிப்போக்கர் ஒருவர், வீடியோவாக எடுத்து அதில் சிறுவனின் நிலை குறித்து கேட்டார். அப்போது தான் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டதாகவும், தனது குடும்பத்தை காப்பாற்ற உதவுவதற்காக வேலை செய்யத் தொடங்கியதாகவும் வீடியோவில் கூறி இருந்தான். அந்த வீடியோவை படமாக்கிய அந்த நபர் ரூ .50 கூடுதலாக கொடுத்தும் வாங்க மறுத்துவிட்டான் சிறுவன் வான்ஷ்.

இந்த வீடியோ வைரலாக, இதனை அம்மாநில முதல்-மந்திரி கவனத்திற்கு சென்றது. இதனை பார்த்த பஞ்சாப் முதல்-மந்திரி சிறுவன் வான்ஷ் உடன் வீடியோ காலில் பேசியதுடன், அவனை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர்களின் குடும்பத்தின் நிலையை உணர்ந்து ரூ.2 லட்சம் உடனடி நிவாரணமாக அறிவித்து இருக்கிறார். சிறுவனை பள்ளியில் சேரும் பொறுப்பை கவனிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அவரது கல்விக்கான அனைத்து செலவுகளையும் மாநில அரசு ஏற்கும் என்றும் அறிவித்து அந்த குடும்பத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். 

இதற்கான அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த முதல்-மந்திரி அமரீந்தர் சிங், சிறுவன் வான்ஷ் சிங்கின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தால் ஈர்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். 

முன்னதாக, வீடியோ கால் அழைப்பின் போது, முதல்-மந்திரி, சிறுவனிடம், "கவலைப்பட வேண்டாம், நீ பள்ளிக்கு திரும்புவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். நீ படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உனது குடும்பம் மற்றும் பிற செலவுகளை கவனித்துக்கொள்ள உங்கள் குடும்பத்திற்கு உதவுகிறேன் என்று ஆறுதல் வார்த்தைகளை கூறியிருக்கிறார்.

Next Story