கொரோனா பரவல்: இந்தியாவில் 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்


கொரோனா பரவல்: இந்தியாவில் 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்
x
தினத்தந்தி 9 May 2021 7:59 AM GMT (Updated: 9 May 2021 7:59 AM GMT)

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவின் 2-வது அலை அச்சுறுத்தல் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்கு மேல் இருக்கிறது. கொரோனா பரவுவதை தடுக்க முழு ஊரடங்கு தான் தீர்வு என்று மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கை கொண்டு வந்துள்ளனர். இதுவரை 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மராட்டியம், டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், அரியானா, பீகார், ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், இமாச்சலபிரதேசம், மிசோரம் ஆகிய 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளன.

தமிழ்நாட்டில் நாளை முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக 2 வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மராட்டிய மாநிலத்தில் மொத்த பாதிப்பு 50 லட்சத்தை தாண்டிவிட்டது. அங்கு 6 லட்சத்து 57 ஆயிரத்து 19 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த மாதம் 5-ந் தேதியில் இருந்து அங்கு ஊரடங்கு அமலானது. வருகிற 15-ந் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் 24-ந் தேதி வரையும், கேரளாவில் 16-ந் தேதி வரையும், ராஜஸ்தானில் 24-ந் தேதி வரையும், பீகாரில் 15-ந் தேதி வரையும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த மாதம் 19-ந் தேதியில் இருந்து முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. அடுத்த மாதம் 10-ந் தேதி வரை அது நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பஞ்சாப், மத்திய பிரதேசத்தில் 15-ந் தேதி வரையும், உத்தரபிரதேசம், அரியானாவில் 10-ந் தேதி வரையும் ஊரடங்கு இருக்கிறது. ஆந்திரா, குஜராத், மேற்கு வங்காளம், கோவா, புதுச்சேரி, அசாம், தெலுங்கானா, நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக், உத்தரகண்ட் மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story