அசாமின் புதிய முதல் மந்திரியாவதற்கு ஹிமந்தா பிஸ்வாவுக்கு ஆளுநர் ஒப்புதல்


அசாமின் புதிய முதல் மந்திரியாவதற்கு ஹிமந்தா பிஸ்வாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
x
தினத்தந்தி 9 May 2021 1:03 PM GMT (Updated: 9 May 2021 1:03 PM GMT)

அசாமின் புதிய முதல் மந்திரியாவதற்கு ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு ஆளுநர் ஜக்தீஷ் முகி இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.

கவுகாத்தி,

126 உறுப்பினர்களை உள்ளடக்கிய அசாம் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடத்த முடிவானது.  இதன்படி, மார்ச் 27ந்தேதி 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தலும், ஏப்ரல் 1ந்தேதி 13 மாவட்டங்களில் உள்ள 39 தொகுதிகளுக்கு 2வது கட்ட தேர்தலும், தொடர்ந்து ஏப்ரல் 6ந்தேதி 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கு 3வது கட்ட தேர்தலும் நடைபெற்றன.

இந்த தேர்தலில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகளுடன் மெகாகூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிட்டது.

இதேபோன்று, பா.ஜ.க. கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி, ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி இடம் பெற்றன.  கடந்த 2ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  அதில், பா.ஜ.க. கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது.  60 தொகுதிகளில் பா.ஜ.க. தனித்து வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் உள்ளது.  தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்து கொண்டது.

முதல்-மந்திரி வேட்பாளர் யாரென அறிவிக்காமலே பா.ஜ.க. தேர்தலை எதிர்கொண்டது.  இதனால், அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்த விவாதம் எழுந்தது.  அந்த பதவிக்கு  போட்டியாளர்களாக முன்னாள் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் மற்றும் முன்னாள் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா இருந்தனர்.

இதனை தொடர்ந்து, பா.ஜ.க. தலைமை இருவரையும் அழைத்து நேற்று ஆலோசனை நடத்தியது.  இந்த ஆலோசனை கூட்டம் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், அசாமின் பா.ஜ.க. சட்டசபை குழு தலைவராக ஹிமந்தா பஸ்வா சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதனை தொடர்ந்து அவர் முதல் மந்திரியாகிறார்.

இதனை மத்திய வேளாண் மந்திரி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவரான நரேந்திர சிங் தோமர் உறுதிப்படுத்தி உள்ளார்.  இதன்பின்னர் ஹிமந்தா பஸ்வா கூறும்பொழுது, அசாமில் புதிய மந்திரிகள் அனைவரும் நாளை மதியம் 12 மணிக்கு பதவி ஏற்கின்றனர் என கூறினார்.

இந்நிலையில், அசாமின் புதிய முதல் மந்திரியாவதற்கு ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு ஆளுநர் ஜக்தீஷ் முகி ஒப்புதல் வழங்கியுள்ளார்.  இதுபற்றி பா.ஜ.க. மாநில தலைவர் ரஞ்சித் தாஸ் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, எங்களுடைய தலைவர், கவர்னரை சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கினார்.

அதனுடன், அசோம் ஞான பரிஷத் கட்சி, ஐக்கிய மக்கள் விடுதலை கட்சி உள்ளிட்டோரின் ஆதரவு கடிதங்களையும் வழங்கினார்.  அதனை பெற்று கொண்ட கவர்னர் ஆணை ஒன்றை பிறப்பித்து உள்ளார்.

அதில், அசாம் கவர்னர், பேராசிரியர் ஜக்தீஷ் முகியாகிய நான், மாநிலத்தின் முதல் மந்திரியாக ஹிமந்தா பிஸ்வா சர்மாவை நியமிக்கிறேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.


Next Story