புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா 2வது அலையால் தினமும் 1,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோல் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 15க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி வருகின்றனர். அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே வேறு வழியின்றி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன் முடிவுகள் இன்று வெளிவந்தன. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனால், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளும்படி அவர் கேட்டு கொண்டுள்ளார். அவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படியும் கேட்டு கொண்டார்.