கொரோனா பணி: 400 ஓய்வு பெற்ற ராணுவ மருத்துவ அதிகாரிகளை நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 May 2021 7:46 PM GMT (Updated: 9 May 2021 7:46 PM GMT)

கொரோனா பணிகளுக்காக 400 ஓய்வு பெற்ற ராணுவ மருத்துவ அதிகாரிகளை நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா 2-வது அலையால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஆஸ்பத்திரிகள் போதுமான டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள், தடுப்பூசிகள், ஆக்கிஜன், மருந்துகள், படுக்கைகள் இல்லாமல் தடுமாறி வருகின்றன.

இந்நிலையில், கொரோனா தொடர்பான பணிகளுக்காக, ராணுவ மருத்துவப் பிரிவு மற்றும் குறுகியகால சேவை ஆணையத்தின் 400 ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்குமாறு ஆயுதப்படை மருத்துவ சேவைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளதாக நேற்று தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட மருத்துவ அதிகாரிகள், அதிகபட்சம் 11 மாத காலத்துக்கு பணி அமர்த்தப்படுவர்.

கடந்த 2017- 2021-ம் ஆண்டுக்கு இடையில் ஓய்வுபெற்ற அதிகாரிகள், ‘பணிச் சுற்றுலா’ என்ற திட்டத்தின் கீழ் இ்வ்வாறு பணி அமர்த்தப்படுவர். அவர்களுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட மாதாந்திர சம்பளம் வழங்கப்படும். சிறப்பு நிபுணர்களுக்கு அதற்கான கூடுதல் ஊதியமும் அளிக்கப்படும். இவ்வாறு பணியமர்த்தப்படும் மருத்துவ அதிகாரிகள் மருத்துவரீதியாக தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story