ஜி.எஸ்.டி. விலக்கு அளித்தால் கொரோனா மருந்துகள் விலை உயரும் - மம்தா பானர்ஜிக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 May 2021 9:23 PM GMT (Updated: 9 May 2021 9:23 PM GMT)

ஜி.எஸ்.டி. விலக்கு அளித்தால் கொரோனா மருந்துகள் விலை உயரும் என்று மம்தா பானர்ஜிக்கு நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் வினியோகம் மற்றும் இறக்குமதிக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழுவிலக்கு அளித்தால், அவற்றின் விலை உயர்ந்து விடும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாக அளிக்கும் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டிகள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி., சுங்கவரி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று கடிதம் எழுதி இருந்தார்.

இந்தநிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும்வகையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தற்போது, உள்நாட்டில் வினியோகிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள், இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகள் ஆகியவற்றுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது. கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது.

இந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழுவிலக்கு அளித்தால், அவற்றின் உற்பத்தியாளர்கள் தாங்கள் செலுத்திய உள்ளீட்டு வரியை ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்படும்.

அப்போது, வேறு வழியின்றி அவர்கள் தடுப்பூசி உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தி, பொதுமக்கள் மீது அந்த சுமையை திணிப்பார்கள். அதனால், பொருட்கள் விலை உயர்ந்து பொதுமக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.

வெறும் 5 சதவீத ஜி.எஸ்.டி.யாவது இருந்தால்தான், உற்பத்தியாளர்கள் உள்ளீட்டு வரி ஆதாயத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். உற்பத்தியாளர்களும் பலன் அடையலாம். பொதுமக்களும் பலன் அடையலாம். எனவே, தடுப்பூசிக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிப்பது, பொதுமக்களுக்கு பலன் தருவதற்கு பதிலாக, எதிர்மறை விளைவை ஏற்படுத்தி விடும்.

இந்தியாவில் இலவசமாக வினியோகிப்பதற்காக நன்கொடையாக பெறப்பட்ட கொரோனா நிவாரண பொருட்கள் இறக்குமதிக்கு ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யில் இருந்து கடந்த 3-ந் தேதி முதல் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த பொருட்களை மாநில அரசுகளும், இந்திய செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளும் இலவசமாக இறக்குமதி செய்து கொள்ளலாம்.

கொரோனா நிவாரண பொருட்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு ஏற்கனவே சுங்கவரி, சுகாதார செஸ் வரி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

ஒரு பொருள் மீது ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யாக 100 ரூபாய் வசூலிக்கப்பட்டால், அதில் மாநில ஜி.எஸ்.டி.யாக மாநிலத்துக்கு 50 ரூபாயும், மத்திய ஜி.எஸ்.டி.யாக 50 ரூபாயும் கிடைக்கும்.

அத்துடன், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மொத்த வசூலில் 41 சதவீத தொகை, மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் 100 ரூபாயில் மாநிலங்களுக்கு ரூ.70.50 கிடைக்கிறது” என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Next Story