காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைப்பு


காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைப்பு
x
தினத்தந்தி 10 May 2021 11:18 AM GMT (Updated: 10 May 2021 11:18 AM GMT)

கொரோனா பெருந்தொற்று சூழ்நிலையால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையிலான அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடந்தது.  இதில், நடந்து முடிந்த  5 மாநில தேர்தல் முடிவுகள், நாடு முழுவதுமுள்ள கொரோனா பாதிப்பு, தடுப்பூசி பணிகள் உள்ளிட்டவை பற்றி சோனியா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதில் உரையாற்றிய அவர், மோடி அரசு தனது பொறுப்பை தட்டி கழித்து தடுப்பூசி போடுவதை மாநிலங்களுக்கு விட்டுவிட்டது.  கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது.  அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசால் முடியும் என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, கடந்த ஜனவரி 22ந்தேதி நடந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் நடைமுறையை ஜூன் இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என நாம் முடிவு செய்திருந்தோம்.  தேர்தல் அமைப்புக்கான தலைவர் மதுசூதன் மிஸ்திரி தேர்தல் அட்டவணையை தயார் செய்துள்ளார் என கூறினார்.  கடந்த கூட்டத்தில் ஜூன் 23ல் தேர்தல் நடத்த முடிவாகி இருந்தது.

எனினும் இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான அசோக் கெலாட், ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர், கொரோனா பெருந்தொற்று சூழலால் தேர்தல் நடத்த வேண்டிய தேவையில்லை என கூறினர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.  கொரோனா பெருந்தொற்று காலத்தில் தேர்தல நடத்துவது சரியாக இருக்காது என கூறி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், தேர்தலை ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.  இதனால், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கட்சியின் மத்திய தேர்தல் அமைப்பு முடிவு செய்யும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


Next Story