5 மாநில சட்டசபை தேர்தல் தோல்வியில் பாடம் கற்றுக் கொண்டு கட்சியை சீரமைக்க வேண்டும்; காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியாகாந்தி பேச்சு


5 மாநில சட்டசபை தேர்தல் தோல்வியில் பாடம் கற்றுக் கொண்டு கட்சியை சீரமைக்க வேண்டும்; காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியாகாந்தி பேச்சு
x
தினத்தந்தி 10 May 2021 4:14 PM GMT (Updated: 10 May 2021 4:21 PM GMT)

5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட கடுமையான பின்னடைவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு கட்சியை சரி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியாகாந்தி பேசினார்.

காரிய கமிட்டி கூட்டம்

சமீபத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது. அதில், புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற தவறியது. மேற்கு வங்காளத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே காங்கிரஸ் இடம் பெற்ற தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்தநிலையில், 4 மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கட்சி தலைவர் சோனியாகாந்தி தொடக்க உரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-

இந்த தேர்தலில் ஏற்பட்ட கடுமையான பின்னடைவை கவனத்தில் கொள்ள வேண்டும். பின்னடைவுக்கான எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஒரு சிறிய குழுவை அமைக்கப் போகிறேன்.

தலைவர் தேர்தல்

கேரளாவிலும், அசாமிலும் ஏற்கனவே இருந்த ஆட்சியை அகற்ற முடியாமல் போனது ஏன்? மேற்கு வங்காளத்தில் ஒரு தொகுதி கூட வெற்றி பெறாதது ஏன்? என்பதற்கான காரணங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம். இந்த ஆராய்ச்சி, நமக்கு அசவுகரியமான பாடங்களை அளிக்கலாம். ஆனால், நாம் யதார்த்தத்தை எதிர்கொள்ள தவறினாலோ, உண்மைகளை பார்க்க தவறினாலோ சரியான பாடங்களை கற்றுக்கொள்ள முடியாது.

காங்கிரஸ் படுதோல்வி அடைந்த மாநிலங்களின் பொதுச்செயலாளர்களும், மேலிட பொறுப்பாளர்களும் இந்த தோல்விக்கான காரணங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இந்த தேர்தல் முடிவுகள், நாம் கட்சியை சரிசெய்ய வேண்டியதன் அவசியத்தை சொல்கிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலை எப்போது நடத்துவது என்று இக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.

தடுப்பூசி செலவு

கடந்த 4 வாரங்களாக கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது. மூன்றாவது அலையும் வரும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மோடி அரசின் மெத்தனத்தால் நாடு மிகப்பெரிய விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அரசியல் நலனுக்காக, தொற்றை பரப்பும் நிகழ்ச்சிகளை மோடி அரசே அனுமதித்தது. கொரோனா தடுப்பூசி போடப்படும் வேகம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. மோடி அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்கிறது. தடுப்பூசிக்கான செலவை மாநிலங்கள் தலையில் மத்திய அரசு திணித்து விட்டது.

அந்த செலவுகளை மத்திய அரசே ஏற்பதுதான் சரியாக இருக்கும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால், வேறு பிரமாண்ட திட்டங்களுக்குத்தான் மோடி அரசு முன்னுரிமை அளிக்கிறது. வெளிநாடுகள் நமக்கு உதவ முன்வருவது மோடி அரசின் திறமையின்மையைத்தான் காட்டுகிறது.

அனைத்து கட்சி கூட்டம்

கொரோனா பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு மோடி அரசை வலியுறுத்தி வருகிறோம். தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். தகுதியுள்ள எந்த குடிமகனும் விடுபடக்கூடாது. காங்கிரஸ் கட்சியின் கொரோனா நிவாரண பொருட்கள் வினியோகத்தை ஒழுங்குபடுத்த தேசிய அளவிலும், மாநில அளவிலும் கொரோனா கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சோனியாகாந்தி பேசினார்.


Next Story