உலக அளவில் மிகவும் வேகமாக 17 கோடி கொரோனா தடுப்பூசி போட்டு இ்ந்தியா சாதனை


உலக அளவில் மிகவும் வேகமாக 17 கோடி கொரோனா தடுப்பூசி போட்டு இ்ந்தியா சாதனை
x
தினத்தந்தி 10 May 2021 5:27 PM GMT (Updated: 10 May 2021 5:27 PM GMT)

உலக அளவில் மிகவும் வேகமாக 17 கோடி கொரோனா தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை படைத்து உள்ளது.

தடுப்பூசி பணிகள்

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள வீரர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் பல்வேறு பிரிவினருக்கு போடும் பணிகள் தொடங்கியது. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் என படிப்படியாக பயனாளர்கள் எல்லை விரிவுபடுத்தப்பட்டது.

கடைசியாக கடந்த 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் மாநில அரசுகளும், தனியார் ஆஸ்பத்திரிகளும் நேரடியாகவே தடுப்பூசியை கொள்முதல் செய்து பயன்படுத்திக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

114-வது நாளில் எட்டியது

அந்தவகையில் இந்தியாவில் தொடக்கம் முதலே தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான பயனாளிகள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். தற்போது கொரோனாவின் 2-வது அலை நாட்டில் வேகமெடுத்திருக்கும் நிலையில், தடுப்பூசியையே பிரதான ஆயுதமாக கருதி மத்திய-மாநில அரசுகள் இந்த பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

இதன் பயனாக உலக அளவில் மிகவும் வேகமாக 17 கோடி தடுப்பூசி டோஸ்களை பயன்படுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா எட்டியிருக்கிறது. தடுப்பூசி திட்டத்தின் 114-வது நாளான நேற்று முன்தினம் இந்த சாதனை அளவை இந்தியா எட்டியது.நேற்று காலை 7 மணி நிலவரப்படி மொத்தம் 17 கோடியே 1 லட்சத்து 76 ஆயிரத்து 603 டோஸ்கள் போடப்பட்டிருந்தன.

பயனாளிகள் எண்ணிக்கை

இந்த மிகப்பெரும் மைல்கல்லை வேகமாக எட்டியதில் சீனா, அமெரிக்காவையும் பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அந்தவகையில் சீனா 119-வது நாளிலும், அமெரிக்கா 115-வது நாளிலும்தான் இந்த சாதனையை படைத்திருந்தன.இந்த 17 கோடிக்கு அதிகமான டோஸ்களில் சுகாதார பணியாளர்களுக்கு போடப்பட்ட எண்ணிக்கை 95,47,102 பேர் (முதல் டோஸ்), 64,71,385 பேர் (2-வது டோஸ்) ஆகும். முன்கள பணியாளர்களை பொறுத்தவரை 1,39,72,612 பேர் முதல் டோசும், 77,55,283 பேர் 2-வது டோசும் போட்டுள்ளனர்.

18 முதல் 44 வயது வரையிலான பயனாளர்கள் 20,31,854 பேர் முதல் டோஸ் பெற்றுள்ளனர். 45 முதல் 60 வயது வரையிலான பயனாளிகள் முறையே 5,51,79,217 மற்றும் 65,61,851 பேர் முறையே முதல் மற்றும் 2-ம் டோஸ் பெற்றிருக்கிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5,36,74,082 பேர் முதல் டோசும், 1,49,83,217 பேர் 2-வது டோசும் பெற்றிருக்கின்றனர்.

1 கோடி டோஸ்கள் கையிருப்பு

நாடு முழுவதும் இதுவரை 17 கோடிக்கும் மேலான டோஸ்கள் போடப்பட்டிருக்கும் நிலையில் நேற்று காலை நிலவரப்படி மாநில அரசுகளிடம் இன்னும் 1 கோடிக்கு அதிகமான (1,04,30,063) தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இன்னும் அடுத்த ஓரிரு நாட்களில் 9,24,910 தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்களுக்கு வழங்க இருப்பதாகவும் கூறியுள்ள சுகாதார அமைச்சகம், இதுவரை மாநிலங்களுக்கு சுமார் 18 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

 


Next Story