ஐதராபாத்தில் கொரோனா நோயாளிகளிடம் பூஞ்சைத் தொற்று அமைதியாக உயிரைக் குடிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கை


ஐதராபாத்தில் கொரோனா நோயாளிகளிடம் பூஞ்சைத் தொற்று அமைதியாக உயிரைக் குடிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 May 2021 12:41 AM GMT (Updated: 11 May 2021 12:41 AM GMT)

கொரோனா நோயாளிகளுக்கு அடுத்தகட்ட அதிர்ச்சியாக, இதனால் பாதிக்கப்பட்டவர்களை உயிருக்கு ஆபத்தான பூஞ்சைத் தொற்று தாக்குவது தெரியவந்திருக்கிறது.

ஐதராபாத், 

‘மியூக்கோர்மைகோசிஸ்’ என்ற இந்த பூஞ்சைத் தொற்று, தெலுங்கானா ஐதராபாத்தில் சிகிச்சை பெற்றுவரும் சில கொரோனா நோயாளிகளிடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 3, 4 வாரங்களில், 5 கொரோனா நோயாளிகளுக்கு இந்த பூஞ்சைத் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது, இந்தத் தொற்று பரவி வருவதை காட்டுகிறது என ஐதராபாத் டாக்டர்கள் கூறுகின்றனர்.

கொரோனா பாதிப்புக்காக அதிககாலம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதும், தொடர்ச்சியாக ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துவதும் நோயாளிகளின் நோய் எதிர்ப்புசக்தியை குறைக்கிறது. அதுவே மியூக்கோர்மைகோசிஸ் பூஞ்சைத் தொற்றுக்கு இடமளிப்பதாய் அமைந்துவிடுகிறது. இத்தொற்றுக்கு உள்ளானவர்களின் உடல் உறுப்புகளுக்கு சரிசெய்ய முடியாத பாதிப்பும், உயிராபத்தும் ஏற்படலாம். இது அமைதியாக உயிரை குடிக்கக் கூடியது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

கண்களைச் சுற்றி வீக்கம், முகத்தில் ஒரு பக்கம் அல்லது ஒரு கண்ணில் வலி, கன்னங்களைச் சுற்றி உணர்ச்சி குறைவது, சளியில் ரத்தம் கலந்து வருவது போன்றவை பூஞ்சைத் தொற்றின் சில அறிகுறிகள். இவை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சையை நாட வேண்டும். அவர்களின் நிலையைப் பொறுத்து, பூஞ்சை எதிப்பு மருந்துகள் வழங்கப்படும் அல்லது பாதிக்கப்பட்ட திசு அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

கொரோனா அறிகுறிகளுக்கு தாமே சொந்தமாக ஆன்டிபயாட்டிக்குகள் அல்லது ஸ்டீராய்டுகளை பயன்படுத்துவது ஆபத்தானது. அது, உடலின் எதிர்ப்புசக்தியைக் குறைத்து, பூஞ்சை பாதிப்பு போன்ற இரண்டாம்நிலை தொற்றுகள் ஏற்படக் காரணமாகிவிடும். காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்ற பாதிப்புகளுக்குக் கூட சுயமருத்துவத்தைத் தவிர்த்து, முறையான மருத்துவ சிகிச்சை பெறுவதலே நல்லது என்று டாக்டர்கள் அறிவுரை சொல்கின்றனர்.

Next Story