தெலுங்கானாவில் பொது முடக்கம் அமலாகிறதா? இன்று கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்

தெலுங்கானாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

ஐதராபாத்,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதி தீவிரமடைந்து வருகிறது. இதன்படி தெலுங்கானா மாநிலத்திலும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 826 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5.02 லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தெலுங்கானாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி அலுவலகம் தனது டுவிட்டரில், “தெலுங்கானா அமைச்சரவைக் கூட்டம் ஐதராபாத்தில் நாளை (இன்று) கூடுகிறது. கூட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தி, பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும்.

பொது முடக்கம் பற்றி இரண்டு விதமான கருத்துகளும் வருகின்றன. சில மாநிலங்களில் பொது முடக்கத்துக்குப் பிறகும் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்பது போன்ற தகவல்கள் வருகின்றன. சிலர் பொது முடக்கத்துக்கு ஆதரவான கருத்துகளை முன் வைக்கின்றனர்.

எனவே, பொது முடக்கத்தின் சாதக, பாதகங்கள் குறித்தும், அதன் தாக்கங்கள் குறித்தும் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தேவையான முடிவுகள் எடுக்கப்படும்” என்று பதிவிடப்பட்டிருந்தது. 

Next Story