கொரோனா நிலைமை சீராகும்வரை காங்கிரஸ் தலைவர் தேர்தலை தள்ளிவைக்க ஒருமனதாக முடிவு


கொரோனா நிலைமை சீராகும்வரை காங்கிரஸ் தலைவர் தேர்தலை தள்ளிவைக்க ஒருமனதாக முடிவு
x
தினத்தந்தி 11 May 2021 3:35 AM GMT (Updated: 11 May 2021 3:35 AM GMT)

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை தள்ளிவைக்க காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஆகஸ்டு மாதம், இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.

அவர் ஒன்றரை ஆண்டுக்கு மேலாக இடைக்கால தலைவராக நீடிப்பதால், கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்வு செய்ய தேர்தல் அட்டவணை தயாரிக்கும்படி, கட்சியின் மத்திய தேர்தல் குழுவை கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ் காரிய கமிட்டி கேட்டுக்கொண்டது.

அதன்படி, வருகிற ஜூன் 23-ந் தேதி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தலாம் என்று மதுசூதன் மிஸ்திரி தலைமையிலான தேர்தல் குழு சிபாரிசு செய்தது. ஆனால், நேற்று நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில், கொரோனா நிலைமை மோசமாக இருக்கும்போது, தலைவர் தேர்தல் நடத்துவது உகந்தது அல்ல என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, கொரோனா நிலைமை சீராகும்வரை, புதிய தலைவர் தேர்தலை நடத்தக்கூடாது என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் முன்மொழிந்தார். அதை மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் வழி மொழிந்தார். எனவே, தலைவர் தேர்தலை தள்ளிவைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

Next Story