கொரோனா குறித்த தவறான தகவலை பரப்புவதை நிறுத்துங்கள்; சோனியா காந்திக்கு, ஜே.பி.நட்டா கடிதம்


கொரோனா குறித்த தவறான தகவலை பரப்புவதை நிறுத்துங்கள்; சோனியா காந்திக்கு, ஜே.பி.நட்டா கடிதம்
x
தினத்தந்தி 11 May 2021 1:55 PM GMT (Updated: 11 May 2021 1:55 PM GMT)

கொரேனா குறித்த தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று சோனிய காந்திக்கு, ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்தார்.

கொரோனா 2-வது அலை

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில், மோடி அரசின் பாகுபாடு, உணர்வின்மை, திறமையின்மை ஆகியவற்றால் தான் கொரோனா 2-வது அலை வந்துள்ளது என கூறி கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனாவுக்கு எதிரான போரில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்பட உயர்மட்ட தலைவர்களின் போலியான நடத்தை, சிறுபிள்ளைத்தனமான பேச்சு ஆகியவை நினைவில் வைக்கப்படும். உங்கள் கட்சியும், உங்கள் தலைமையும் ஊரடங்குக்கு எதிராக பேசினீர்கள். ஆனால், என்ன செய்தீர்கள். கேரளாவில் மிகப்பெரிய தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்தி கொரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்தீர்கள். போராட்டங்களுக்கு ஆதரவாக இருந்துவிட்டு, கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என பேசுகிறீர்கள்.

பொய்யான தகவல்

காங்கிரஸ் கட்சியில் சில உறுப்பினர்கள் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். ஆனால், மூத்த தலைவர்கள் தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பி மக்களை தவறாக வழிநடத்துவதை நிறுத்த வேண்டும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி என்பது தேசத்தின் பெருமையை, மரியாதையை குறிக்கிறது. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தடுப்பூசி குறித்து மக்கள் மனதில் சந்தேகங்களை எழுப்பி, ஏளனம் செய்ய முயல்கிறார்கள். உங்கள் கட்சியை சேர்ந்த முதல்-மந்திரி கூட இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.

மத்திய அரசின் விஸ்டா திட்டத்தை எதிர்க்கும் நீங்கள், உங்கள் கட்சி ஆட்சியில் இருந்த போது தான் புதிய நாடாளுமன்றம் குறித்து தேவையை எழுப்பியது. அப்போது இருந்த சபாநாயகர் மீரா குமார், இதை மக்களவையில் எடுத்து கூறினார்..

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story