கேரள இரும்பு பெண்மணி மறைவு: ராகுல் காந்தி, மத்திய மந்திரி முரளீதரன் இரங்கல்


கேரள இரும்பு பெண்மணி மறைவு:  ராகுல் காந்தி, மத்திய மந்திரி முரளீதரன் இரங்கல்
x
தினத்தந்தி 11 May 2021 3:26 PM GMT (Updated: 11 May 2021 3:26 PM GMT)

கேரளாவின் இரும்பு பெண்மணி என அழைக்கப்படும் கே.ஆர். கவுரி மறைவுக்கு கட்சி வேற்றுமையின்றி பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரளாவின் கம்யூனிஸ்டு இயக்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கே.ஆர். கவுரி.  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர், வயது முதிர்வால் தனியார் மருத்துவமனையில் சில காலங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், ஐ.சி.யூ.வில் வைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.  அவருக்கு வயது 102.  ஜனாதிபத்ய சம்ரக்ஷன சமிதியின் தலைவராகவும் இருந்த அவர், ஆணாதிக்கம் நிறைந்த கேரள அரசியலில் சக்தி வாய்ந்த பெண்மணியாக வலம் வந்தவர்.

கேரளாவில் முதல் சட்டசபையின் உறுப்பினராக இருந்தவர்களில் இவர் மட்டுமே இதுவரை உயிருடன் இருந்துள்ளார்.  நம்பூதிரிபாடு தலைமையிலான அந்த சட்டசபையின் முதல் அமைச்சரவையில் இருந்த ஒரே பெண்மணியும் இவரே ஆவார்.

இதன்பின் அவருடன் அமைச்சரவையில் இடம்பெற்ற டி.வி. தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  கம்யூனிஸ்டு கட்சி இரண்டாக உடைந்தபொழுது, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் கவுரி தன்னை இணைத்து கொண்டார்.  அவரது கணவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலேயே இருந்துள்ளார்.

கே.எம். மாணிக்கு பின்பு நீண்டகாலம் சட்டசபை உறுப்பினராக பதவி வகித்தவர்களின் வரிசையில் அவர் இடம் பெற்றுள்ளார்.

அவரது மறைவுக்கு, முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி, காங்கிரஸ் கட்சியின் வயநாடு தொகுதியின் எம்.பி.யான ராகுல் காந்தி மற்றும் ஜெய்ராம் ரமேஷ், சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான ரமேஷ் சென்னிதாலா, பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் மத்திய மந்திரியான முரளீதரன், பா.ஜ.க. கேரள தலைவர் சுரேந்திரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கட்சி வேற்றுமையின்றி இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


Next Story