இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை முடிவுக்கு வருவது எப்போது? பிரபல நிபுணர் தகவல்


இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை முடிவுக்கு வருவது எப்போது? பிரபல நிபுணர் தகவல்
x
தினத்தந்தி 12 May 2021 6:30 PM GMT (Updated: 12 May 2021 6:26 PM GMT)

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை எப்போது முடிவுக்கு வரும் என்ற தகவலை பிரபல நிபுணர் வெளியிட்டுள்ளார்.

புதுடெல்லி,

பிரபல ஆங்கில நாளிதழ் இணையவழியில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பிரபல வைராலஜிஸ்ட்டும், அரியானாவின் அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி உயிரி அறிவியல்கள் நிறுவனத்தின் இயக்குனருமான ஷாகித் ஜமீல் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை குறித்து பல முக்கிய தகவல்களை வெளியிட்டார். அது வருமாறு:-

* கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை உச்சம் தொட்டுவிட்டதா என்பதை இப்போதே கூறமுடியாது. கொரோனா பரவல் வளைவு தட்டையாகி இருக்கலாம். ஆனால் உச்சத்தின் மறுபக்கம் எளிதாக கீழே இறங்கி விடாது. அது ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கலாம். அனேகமாக ஜூலை வரையில் இந்த இரண்டாவது அலை செல்லும்.

* முதல் அலையில் ஒரே சீராக தொற்று பரவல் குறைந்தது. ஆனால் இப்போது ஆரம்பமே பெரிய எண்ணிக்கையில்தான் அமைந்தது. 96 ஆயிரம், 97 ஆயிரம் பேர் பாதிப்புக்கு பதிலாக 4 லட்சத்துக்கு மேலாக பாதிப்புக்குள்ளாகி இந்த அலை தொடங்கி இருக்கிறது. எனவே இது இன்னும் அதிக நேரம் எடுக்கும். ஒவ்வொரு நேரத்திலும், இந்த செயல்பாட்டின்போது, நிறைய பேர் பாதிப்புக்கு ஆளாவார்கள்.

* இந்தியாவில் கொரோனாவின் உண்மையான இறப்பு விகிதம் தவறானது. யாரோ அல்லது குழுவினரின் அல்லது அரசின் ஏதேனும் தீய வடிவமைப்பு காரணமாக இல்லை. இறப்பு விகிதத்தை பதிவு செய்யும் முறை தவறு என்று கருதுகிறேன்.

* இரண்டாவது அலை எழுச்சி பெற, தேர்தல் பிரசார கூட்டங்களும், மத அடிப்படையிலான கூட்டங்களும்தான் காரணம்.

* தடுப்பூசியை பொறுத்தமட்டில் கடந்த ஜனவரி, பிப்ரவரியில் வாய்ப்பு இருந்தும் நிறைய பேர் போட்டுக்கொள்ளவில்லை. பிப்ரவரி 3-ம் வாரத்துக்கு பின்னரே வேகம் பிடித்தது. இருப்பினும் கிட்டத்தட்ட 2 சதவீதத்தினர்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பார்கள். தடுப்பூசி பாதுகாப்பானது அல்ல என்றெல்லாம் தகவல்கள் வெளியானதை பலரும் நம்பிவிட்டனர். ஆனால் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. அதன் பக்க விளைவுகள் அரிதானவை. தடுப்பூசியின் அரிதான பக்க விளைவால் சாவோர் எண்ணிக்கையை விட இடி மின்னல் தாக்கி இறப்போர் எண்ணிக்கை அதிகம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story