மேற்குவங்காளம் அரசின் எதிர்ப்பை மீறி வன்முறை நடந்த பகுதிகளை இன்று நேரில் பார்வையிடுகிறார் கவர்னர்


மேற்குவங்காளம் அரசின் எதிர்ப்பை மீறி வன்முறை நடந்த பகுதிகளை இன்று நேரில் பார்வையிடுகிறார் கவர்னர்
x
தினத்தந்தி 12 May 2021 7:15 PM GMT (Updated: 12 May 2021 7:15 PM GMT)

மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளை மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் இன்று நேரில் பார்வையிடுகிறார்.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 213 தொகுதிகளை கைப்பற்றி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது. பாஜக 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. சிபிம் கூட்டணி 1 தொகுதியையும், மற்றவை 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளது. ஆட்சியை தக்க வைத்துள்ள மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்குவங்காள முதல்மந்திரியாக பதவியேற்றுள்ளார்.

இதற்கிடையில், தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து பாஜக கட்சினர், வீடுகள், அலுவலகங்கள், கடைகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

மேற்குவங்காளத்தின் பல்வேறு மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தேர்தலுக்கு பிந்தைய இந்த வன்முறை சம்பவங்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்குவங்காள அரசு தெரிவித்துள்ளது. ஆனால், வன்முறை சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

இந்த வன்முறைக்கான காரணங்களை ஆராய மத்திய உள்துறை அமைச்சகத்தின் உண்மை கண்டறியும் குழு மேற்குவங்காளத்திற்கு சென்றது. அங்கு வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ் போன்ற மாவட்டங்களில் வன்முறை நடந்த இடங்களை உள்துறை அமைச்சகத்தின் உண்மை கண்டறியும் குழு நேரில் பார்வையிட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தயாரிக்கப்படும் அறிக்கையை உள்துறை அமைச்சகத்திற்க்கு அனுப்பி வைக்கும் படி மாநில கவர்னர் ஜக்தீப் தங்கரிடம் மத்திய உள்துறை அமைச்சக உண்மை கண்டறியும் குழு தெரிவித்தது.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை நடைபெற்ற பகுதிகளை மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் இன்று நேரில் பார்வையிடுகிறார். வன்முறை நடைபெற்ற மாவட்டங்களில் ஒன்றான கோச் பிஹர் மாவட்த்தை கவர்னர் ஜக்தீப் இன்று நேரில் பார்வையிடுகிறார்.

இந்த ஆய்வுக்கான ஏற்பாடுகளை செய்யும் படி மாநில அரசிடம் தெரிவித்த போதும் மாநில அரசு எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்று கவர்னர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இன்று மேற்கொள்ள ஆய்வு பயணத்தின் போது பி.எஸ்.எஃப். படையினரின் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை நடந்த பகுதிகளை கவர்னர் பார்வையிடுவது, நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வரும் விதிமுறைகளை மீறும் செயல் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால், மிகுந்த துயரத்தில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நேரம் இது என்று தெரிவித்துள்ள கவர்னர் திட்டமிட்டபடி இன்று வன்முறை நடந்த பகுதிகளை பார்வையிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Next Story