தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா பாதித்த 2 ஆயிரம் பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் + "||" + Maharashtra may have over 2000 cases of Mucormycosis

மராட்டியத்தில் கொரோனா பாதித்த 2 ஆயிரம் பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்

மராட்டியத்தில் கொரோனா பாதித்த 2 ஆயிரம் பேருக்கு  கருப்பு பூஞ்சை நோய்
மராட்டியத்தில் கொரோனாவுக்கு ஆளான 2 ஆயிரம் பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 111 பேர் மும்பை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை,

நாடு முழுவதும் பரவிவரும் கொடிய கொரோனா கொத்து கொத்தாக உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் புதிய அதிர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் “மியூக்கோர்மைகோசிஸ்” என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

அதிகப்படியான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு அமைதியாக உயிரை பறிக்க கூடியது என்ற அதிர்ச்சி தகவலை டாக்டர்கள் வெளியிட்டுள்ளனர். தலைவலி, காய்ச்சல், கண்களுக்கு கீழ் வலி மற்றும் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை இந்த பூஞ்சை பாதிப்புக்கு முக்கிய அறிகுறியாகும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும், எனவே கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் ரத்தத்தில் சக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்தநிலையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு விரைந்து எடுத்து வருகிறது. 
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போது மராட்டியத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு “மியூக்கோர்மைகோசிஸ்” எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று பாதித்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த எண்ணிக்கை நிச்சயம் மேலும் அதிகரிக்கும். 
இந்த கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு ஆளாபவர்களில் 50 சதவீதம் பேர் இறப்புக்கு ஆளாகிறார்கள். 

கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ கல்லூரிகளுடன் இணைக்கப்பட்ட  மருத்துவமனைகளை பயன்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.  காரணம் இந்த நோய்க்கு பலதரப்பட்ட சிகிச்சைகள் தேவைப்படலாம். 

குறிப்பாக ‘மியூக்கோர்மைகோசிஸ்’ நோயாளிகளுக்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவர், கண் மருத்துவர் மற்றும் நரம்பியல் நிபுணர்களின் சிகிச்சை தேவைப்படலாம். 
இவ்வாறு அவர் கூறினார். 

இதற்கிடையே இந்த கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 111 பேர் மும்பை ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 38 பேர் நாயர் ஆஸ்பத்திரியிலும், 34 பேர் கே.இ.எம். ஆஸ்பத்திரியிலும், 32 பேர் சயான் ஆஸ்பத்திரியிலும், 7 பேர் கூப்பர் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி கூடுதல் கமிஷனர் சுரேஷ் காகனி கூறினார். 

அதேநேரத்தில் இவர்களில் பெரும்பாலானோர் மும்பைக்கு வெளியே வசித்து வருபவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.