இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி ஐந்து மாதங்களில் 216 கோடி தடுப்பூசி தயாராகி விடும் மத்திய அரசு தகவல்


இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி ஐந்து மாதங்களில் 216 கோடி தடுப்பூசி தயாராகி விடும் மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 14 May 2021 12:17 AM GMT (Updated: 14 May 2021 12:17 AM GMT)

இந்தியாவில் வயது வந்த அனைவருக்கும் தடுப்பூசி போடுகிறவகையில், ஐந்து மாதங்களில் 216 கோடி தடுப்பூசி தயாராகி விடும் என்று மத்திய அரசு கூறுகிறது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய 3 தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. முதல் இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் வந்து விட்டன.

இந்தநிலையில் மத்திய அரசு கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் 3-வது கட்டமான 18 வயதானோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம், தடுப்பூசி பற்றாக்குறையால் பல மாநிலங்களில் தாமதமாகி உள்ளது.

கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி ஒன்றுதான் அதற்கு எதிரான பாதுகாப்பு கவசமாக அமைந்துள்ளது.

216 கோடி டோஸ்

இந்த நிலையில் நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே. பால் நேற்று கூறியதாவது:-

இந்திய நாட்டில், நாட்டின் மக்களுக்கு இன்னும் 5 மாதங்களில் 216 கோடி தடுப்பூசி தயாராக இருக்கும். நாம் முன்னோக்கி செல்கிறபோது (வயது வந்த) அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்துவிடும்.

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த எண்ணிக்கை 300 கோடியாக இருக்கும்.

ஆகஸ்டு முதல் டிசம்பர் வரையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் 75 கோடி டோஸ் உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி 55 கோடி கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிற தடுப்பூசிகள்

மேலும் இந்த காலகட்டத்தில் பயாலஜிக்கல் இ நிறுவனம் 30 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஜைடஸ் கேடிலா நிறுவனம் 5 கோடி தடுப்பூசியும், இந்திய சீரம் நிறுவனம் நோவாவேக்ஸ் தடுப்பூசியின் 20 கோடி டோசும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் மூக்கு வழி செலுத்தும் தடுப்பு மருந்து 10 கோடி டோசும், ஜெனோவா 6 கோடி டோசும், ஸ்புட்னிக் வி தடுப்பூசி 15.6 கோடி டோசும் தயாராகும் என தகவல்கள் கூறுகின்றன.

Next Story