4 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் இன்று ஆலோசனை


4 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 15 May 2021 6:25 AM GMT (Updated: 15 May 2021 6:25 AM GMT)

குஜராத், ஆந்திரா உள்ளிட்ட 4 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை, ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ வசதிகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான பாதுகாப்பு அம்சமாக கருதப்படும் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில், பல்வேறு மையங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தடுப்பூசி பற்றாக்குறையை தவிர்க்க மாநில அரசுகள் சுயமாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் இன்று குஜராத், ஆந்திரா, உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கொரோனா பரவல் நிலவரம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து காணொலி மூலமாக மதியம் 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story