ஆக்சிஜன் சிலிண்டர் தருகிறோம் என கூறி நாடு முழுவதும் 1,000 பேரிடம் ரூ.2 கோடி மோசடி


ஆக்சிஜன் சிலிண்டர் தருகிறோம் என கூறி நாடு முழுவதும் 1,000 பேரிடம் ரூ.2 கோடி மோசடி
x
தினத்தந்தி 16 May 2021 5:30 PM GMT (Updated: 16 May 2021 5:30 PM GMT)

நாடு முழுவதும் 1,000 பேரிடம் ஆக்சிஜன் சிலிண்டர் தருகிறோம் என கூறி ரூ.2 கோடி மோசடி செய்த 2 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையில் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதனால், ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் கொரோனா மருந்துகளுக்கான தேவை அதிகரித்து உள்ளது.

இதனை பயன்படுத்தி ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளின் விலை பன்மடங்கு அதிகரித்து விற்கப்பட்டது.  பதுக்கலும் நடந்து வருகிறது.  இதேபோன்று, ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கைகள் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர் தருகிறோம் என கூறி நாடு முழுவதும் 1,000 பேரிடம் 2 வெளிநாட்டினர் ரூ.2 கோடி வரை மோசடி செய்துள்ளனர்.  ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மற்றும் சிலிண்டரை வினியோகிப்பதற்கு ரூ.4 ஆயிரம் என ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் பெற்றுள்ளனர்.

அவர்களில் ஒருவர் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்.  மற்றொருவர் கானாவை சேர்ந்தவர்.  இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் இருந்த 165 சிம் கார்டுகள், 22 மொபைல் போன்கள், 5 லேப்டாப்புகள், 2 வைபை உபகரணங்கள் மற்றும் 4 டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  இந்த மோசடிக்காக அவர்கள் இருவரும் நாடு முழுவதும் 20 வங்கி கணக்குகளை பயன்படுத்தி வந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.


Next Story