வீட்டில் வசதி இல்லை... தனி அறையும் இல்லை மரத்தில் கட்டிலை கட்டி தனிமைப்படுத்தி கொண்ட கொரோனா நோயாளி


வீட்டில் வசதி இல்லை... தனி அறையும் இல்லை மரத்தில் கட்டிலை கட்டி தனிமைப்படுத்தி கொண்ட கொரோனா நோயாளி
x
தினத்தந்தி 16 May 2021 9:11 PM GMT (Updated: 16 May 2021 9:11 PM GMT)

வீட்டில் தனி அறை இல்லாததால் மரத்தில் கட்டிலை கட்டி கொரோனா நோயாளி தனிமைப்படுத்தி கொண்டார்.

திருப்பதி,

கொரோனா தொற்று லேசான அறிகுறி இருப்பவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தற்போது இடவசதி இல்லாததால் வீடுகளில் தங்கி கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் வசதியில்லாதவர்கள் வேறு வழியின்றி ஆஸ்பத்திரி வளாகத்தில் தரையில் படுத்தபடியும் சிகிச்சை பெறும் நிலை பல இடங்களில் உள்ளது.

இந்தநிலையில் கொரோனா உறுதியாகி வீட்டில் தனிமைப்படுத்த வசதியில்லாத வாலிபர் ஒருவர் மரத்தில் கட்டிலை கட்டி தனிமைப்படுத்தி கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கொத்தன்கொண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (வயது 25), இவரது வீட்டில் பெற்றோர் சகோதரர் என மொத்தம் 4 பேர் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆஸ்பத்திரியில் போதிய படுக்கை வசதி இல்லாததை அறிந்த அவர் அங்கு செல்லாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள திட்டமிட்டார். ஆனால் அவரது வீட்டில் ஒரே ஒரு அறை மட்டுமே உள்ளதால் வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தின் மேல் கட்டிலை கட்டி தங்கினார்.

கடந்த 2 நாட்களாக அவர் மரத்திலேயே தனிமைப்படுத்தி கொண்டார். அவருக்கு தேவையான உணவு, மருந்து மாத்திரைகள் அனைத்தும் கயிறு மூலம் அவரின் குடும்பத்தினர் வழங்கி வருகின்றனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலர் அவருக்கு உதவ முன் வந்தனர். ஆனால் சிவா உதவிகளை மறுத்து விட்டார். தொடர்ந்து அவர் 3-வது நாளாக மரத்தில் தங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story