இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - இந்தியா


Image courtesy : Reuters/Ibraheem Abu Mustafa
x
Image courtesy : Reuters/Ibraheem Abu Mustafa
தினத்தந்தி 17 May 2021 5:22 AM GMT (Updated: 17 May 2021 5:22 AM GMT)

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் 8-வது நாளாக  தொடர்ந்து நடந்து வருகிறது. காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது. 

காசா மீதான சமீபத்திய இஸ்ரேலிய வான் தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.நேற்றையை  இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் 16 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் உட்பட 42 பேர் இறந்ததாக காசா அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரத்தில் பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேல் மீது 3,000 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவில் ஒட்டுமொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 55 குழந்தைகள் மற்றும் 33 பெண்கள் உட்பட 188 பேர், 1,230 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் டஜன் கணக்கான போராளிகளும் இருப்பதாக இஸ்ரேல் கூறி உள்ளது.

ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசிய சிறிது நேரத்திலேயே. இன்று அதிகாலை, இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா நகரத்தின் பல பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட  வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, 

தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று சர்வதேச சமூகம் இருதரப்பையும் வலியுறுத்தி வருகிறது. 

அந்த வகையில், இஸ்ரேல்- ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டு வர ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலையிட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோணியோ குத்ரெஸ் மேலும் இங்கு போர் நடைபெறுவது  இப்பகுதியை "கட்டுப்படுத்த முடியாத நெருக்கடிக்கு" தள்ளக்கூடும். வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு அவர் கேட்டு கொண்டு உள்ளார்.

காசாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாகவும், இது மருத்துவமனைகள் மற்றும் பிற முக்கிய நிறுவனங்கள் மின்சாரம் இணைப்பை  இழக்க நேரிடும் என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் படையினருக்கும் இடையே வெடித்துள்ள பதற்றமான மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். இருதரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று ஐநா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். 

ஜெருசலேமில் தொடங்கிய மோதல் தற்போது கட்டுப்பாட்டை மீறி போர் வெடிக்கும் சூழலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இருதரப்பினரும் கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் பேசிய இந்திய தூதர், அண்மைக்காலத்தில் மிகவும் பதற்றம் மிக்க சூழலை இந்த மோதல்கள் உருவாக்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மே 16 அன்று ஐ.நா.வின் இந்திய  நிரந்தர பிரதிநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் ராக்கெட் நடவடிக்கையை இந்தியா எதிர்த்து உள்ளது. "வன்முறை, ஆத்திரமூட்டல், தூண்டுதல் மற்றும் அழிவு போன்ற அனைத்து செயல்களையும் நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்" என்று இந்திய அறிக்கை கூறியுள்ளது.

ஹமாஸ் நடவடிக்கையை இந்தியா எதிர்த்தாலும், இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய அதிகாரிகளுக்கிடையேயான  நேரடி பேச்சுவார்த்தை மூலம் மாநில தீர்வு காண்பதிலும்  உறுதியாக உள்ளது.


Next Story