மந்திரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம்: “என்னையும் கைது செய்யுங்கள்” - மம்தா பானர்ஜி ஆவேசம்


மந்திரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம்: “என்னையும் கைது செய்யுங்கள்” -  மம்தா பானர்ஜி ஆவேசம்
x
தினத்தந்தி 17 May 2021 7:22 AM GMT (Updated: 17 May 2021 7:22 AM GMT)

நாரதா லஞ்ச வழக்கு தொடர்பாக, மந்திரிகள், எம்எல்ஏ.க்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தில், தன்னையும் கைது செய்யுமாறு சி.பி.ஐ அதிகாரிகளிடம் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் உள்ள நாரதா இணையதளம் 2016ஆம் ஆண்டு ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. அதில் போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணமூல் காங்கிரஸ் மந்திரிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆதரவாக நடந்து கொள்வதற்குப் பணம் பெற்றனர். இந்தக் காட்சியை நாரதா நிறுவனம் ஸ்டிங் ஆப்ரேஷன் மூலம் வெளிக்கொண்டு வந்தது.

2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக நாரதா விவகாரம் விஸ்வரூபமெடுத்ததால் மம்தா தேர்தலில் தோல்வி அடைவார் என்று பேசப்பட்டது. ஆனால், எதிர்ப்புகளையும், அதிருப்திகளையும் மீறி மம்தா பானர்ஜி தேர்தலில் வென்றார். இந்த நாரதா வீடியோ டேப் விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் நடந்தபோது மந்திரிகளாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிர்ஹத் ஹக்கீம், சுப்ரஜா முகர்ஜி, மதன் மித்ரா, சோவன் சாட்டர்ஜி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தது.

இதனைத்தொடர்ந்து இந்த 4 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க மே.வங்காள கவர்னர் தனகரிடம் சிபிஐ அனுமதி கோரியிருந்தது. அதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்நிலையில் நாரதா டேப் வெளியான வழக்கில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசின் மந்திரிகள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 4 பேரை சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 

திரிணமூல் காங்கிரஸ் அரசின் மந்திரிகள், எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்தவுடன் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, உள்ளிட்ட திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் கொல்கத்தா நிஜாம் பேலசில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்குச் சென்றனர்.  

அங்கு சி.பி.ஐ அதிகாரிகளிடம் பேசிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்ந்த மூத்த தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நீங்கள் எப்படி கைது செய்யலாம். அவர்கள் சரியான நடைமுறை இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளனர். முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்” என்று அவர் ஆவேசமாக கூறினார்.

Next Story