3 லட்சத்துக்கு கீழே இறங்கிய கொரோனா ஒருநாள் பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு


3 லட்சத்துக்கு கீழே இறங்கிய கொரோனா ஒருநாள் பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 May 2021 5:06 PM GMT (Updated: 17 May 2021 5:06 PM GMT)

25 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்துக்கு கீழே இறங்கி உள்ளது. அதே சமயத்தில், பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

27 நாட்களில் மிகக்குறைவு

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடிவந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. 4 லட்சத்துக்கு மேல் சென்றிருந்த ஒருநாள் எண்ணிக்கை, படிப்படியாக குறைந்து, நேற்று 3 லட்சத்துக்கு கீழே இறங்கியது.25 நாட்களுக்கு பிறகு இந்த எண்ணிக்கை 3 லட்சத்துக்கு கீழே வந்துள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 2 லட்சத்து 81 ஆயிரத்து 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 27 நாட்களில் இதுதான் மிகக்குறைந்த அளவாகும்.

மராட்டிய மாநிலத்தில் 34 ஆயிரத்து 389 பேருக்கும், கர்நாடகாவில் 31 ஆயிரத்து 531 பேருக்கும், கேரளாவில் 29 ஆயிரத்து 704 பேருக்கும், ஆந்திராவில் 24 ஆயிரத்து 171 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மராட்டியம், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் மொத்த ஒருநாள் பாதிப்பில் 54.37 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இத்துடன் சேர்த்து, இந்தியாவின் மொத்த பாதிப்பு 2 கோடியே 49 லட்சத்து 65 ஆயிரத்து 463 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை இறங்குமுகம்

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 76 ஆக உயர்ந்துள்ளது. இது, மொத்த பாதிப்பில் 84.81 சதவீதம்.

தற்போது, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து இறங்குமுகமாக இருப்பது நல்ல அறிகுறி ஆகும். அந்தவகையில், நேற்று முன்தினம் 36 லட்சத்து 18 ஆயிரம்பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 35 லட்சத்து 16 ஆயிரத்து 997 ஆக குறைந்துள்ளது. இது, மொத்த பாதிப்பில் 14.09 சதவீதம் ஆகும்.

சாவு அதிகரிப்பு

அதே சமயத்தில், பலி எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 77 உயிர்ப்பலிகள் ஏற்பட்டு இருந்தன. நேற்று இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 106 ஆக அதிகரித்தது. மராட்டிய மாநிலத்தில் 974 பேரும், கர்நாடகாவில் 403 பேரும் பலியாகி உள்ளனர். இத்துடன், மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரத்து 390 ஆக உயர்ந்துள்து. இறப்பு விகிதம் 1.10 சதவீதமாக உள்ளது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 15 லட்சத்து 73 ஆயிரத்து 515 மாதிரிகளில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 31 கோடியே 64 லட்சத்து 23 ஆயிரத்து 658 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.


Next Story