சிபிஐ கைது செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு திடீர் மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதி


சிபிஐ கைது செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு திடீர் மூச்சுத்திணறல் - மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 18 May 2021 6:46 AM GMT (Updated: 18 May 2021 6:46 AM GMT)

நாரதா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் 2 பேருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் அப்போதைய திரிணாமுல் காங்கிரஸ் மந்திரிகள் சிலர் லஞ்சம் பெற்றதை நரதா டி.வி. சேனல் அம்பலப்படுத்தியது. அதாவது போலியான நிறுவனம் ஒன்றின் அதிகாரிகளாக சொல்லிக்கொண்டு இந்த மந்திரிகளை அணுகிய நரதா சேனல் ஊழியர்கள், தங்கள் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுவதற்காக லஞ்சம் கொடுத்தனர். இதை மந்திரிகள் பெற்றுக்கொண்டதை வீடியோவாகவும் அவர்கள் பதிவு செய்து கொண்டனர்.

அப்போதைய மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த பிர்காத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா, சோவன் சட்டர்ஜி ஆகியோர் நரதா சேனல் ஊழியர்களின் வலையில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் லஞ்சம் பெற்ற வீடியோவை கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு நரதா சேனல் வெளியிட்டது. இந்த ‘நரதா ஸ்டிங் டேப்’ விவகாரம் மேற்கு வங்காளம் மட்டுமின்றி நாடு முழுவதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று 2017-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் சிக்கிய பிர்காத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா ஆகிய மூவரும் சமீபத்திய சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆகினர். இதில் பிர்காத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி ஆகியோர் மீண்டும் மந்திரிகளாகி உள்ளனர். மதன் மித்ரா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அதேநேரம் கொல்கத்தா முன்னாள் மேயரும், முன்னாள் மந்திரியுமான சோவன் சட்டர்ஜியோ திரிணாமுல் காங்கிரசில் கட்சியில் இருந்து சற்று விலகி இருந்தார்.

இந்த நிலையில் நரதா சேனல் ஸ்டிங் டேப் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். எனவே இந்த 4 பேர் மீதான வழக்கு நடவடிக்கைகளுக்கு கவர்னர் ஜெக்தீப் தாங்கரின் அனுமதியை சி.பி.ஐ. அதிகாரிகள் நாடியிருந்தனர். 

இதை ஏற்றுக்கொண்ட கவர்னர், 4 பேர் மீதான நடவடிக்கைகளை தொடருமாறு ஒப்புதல் அளித்தார். அதன்படி இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு 4 பேருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர்.

அதன்படி பிர்காத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா மற்றும் சோவன் சட்டர்ஜி ஆகிய 4 பேரும் கொல்கத்தாவில் உள்ள நிஜாம் பேலசில் இயங்கி வரும் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு நேற்று காலையில் வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், குற்றப்பத்திரிகையை இறுதி செய்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

சி.பி.ஐ.யின் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கு வங்காள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கைது நடவடிக்கை குறித்து தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உடனடியாக சி.பி.ஐ. அலுவலகம் விரைந்தார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட்டது.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் 4 பேரையும் சிபிஐ சிறப்பு கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்த அதிகாரிகள் 4 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் கைது செய்யப்பட்ட 4 பேர் தரப்பிலும் ஆஜரான வக்கீல்கள், இந்த வழக்கில் 4 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து 4 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 4 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய தடை விதித்து வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது. இதனால், 4 பேரையும் நேற்று முதல் சிபிஐ தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிபிஐ கட்டுப்பாட்டில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் 2 பேருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டது.

சோவன் சட்டர்ஜியோ மற்றும் மதன் மித்ரா ஆகிய இருவருக்கும் இன்று அதிகாலை அடுத்தடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story