சத்தீஸ்கர்: நக்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் போலீஸ் பலி


சத்தீஸ்கர்: நக்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் போலீஸ் பலி
x
தினத்தந்தி 18 May 2021 8:55 AM GMT (Updated: 18 May 2021 8:55 AM GMT)

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் போலீஸ் உயிரிழந்தார்.

ராய்ப்பூர்,

இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் குழுக்களாக வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் போலீசார், கிராமப்புற மக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருகின்றனர். 

இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட சில மாநிலங்களில் காவல்துறையில் சிறப்பு போலீஸ் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அவ்வாறு தேடுதல் வேட்டையில் ஈடுபடும் போலீசாரை குறிவைத்து நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளும் தாக்குதலில் ஈடுபட்டு வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜப்பூர் மாவட்டம் அம்பிலி கிராமப்புற பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் ஈடுபடுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த அப்பகுதியில் நக்சலைட்டுகள் எதிர்ப்பு பிரிவு போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அங்கு மறைந்து வைத்திருந்த கண்ணி வெடியை நக்சலைட்டுகள் வெடிக்கச்செய்தனர்.

இந்த கண்ணிவெடி தாக்குதலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 1 தலைமை காவலர் உயிரிழந்தார். மற்றொரு போலீஸ் படுகாயமடைந்தனர். 

இதையடுத்து, காயமடைந்த போலீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக, பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story