கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய மேலும் பல நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும் - நிதின் கட்காரி


கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய மேலும் பல நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும் - நிதின் கட்காரி
x
தினத்தந்தி 19 May 2021 5:16 AM GMT (Updated: 19 May 2021 5:16 AM GMT)

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய மேலும் பல நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 54 லட்சத்து 96 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 32 லட்சத்து 26 ஆயிரத்து 719 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 3 லட்சத்து 89  ஆயிரத்து 851 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 19 லட்சத்து 86 ஆயிரத்து 363 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 529 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 83 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஒரேவழியாக உள்ள தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 18 கோடியே 58 லட்சத்து 9 ஆயிரத்து 302 ஆக அதிகரித்துள்ளது. 

இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் சூழ்நிலையில் தேவை அதிகரித்துவருவதால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் சீரம் இன்ஸ்டியூட் (கோவிஷீல்டு) மற்றும் பாரத் பயோடெக் (கோவாக்சின்) ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. இந்த தடுப்பூசிகளின் தயாரிப்பு முறைகளை வேறு நிறுவனங்களுக்கும் வழங்கி அந்த தடுப்பூசிகளை தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய மேலும் பல நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சாலைப்போக்குவரத்துத்துறை மந்திரியுமான நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், கொரோனா தடுப்பூசியின் தேவை, விநியோகத்தை அதிகமாக இருந்தால் அது பிரச்சினைகளை உருவாக்கும். ஒரு நிறுவனத்திற்கு பதிலாக கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கான உரிமத்தை 10 நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் உற்பத்தி செய்யும் தடுப்பூசிகளை நாட்டிற்கு விநியோக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக இருப்பு இருந்தால் அதை பின்னர் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யலாம். இதை 10 முதல் 20 நாட்களுக்குள் மேற்கொள்ளலாம்’ என்றார்.

Next Story