பா.ஜனதா முதல்-மந்திரிகள் மட்டுமே பேச அனுமதி; பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எங்களை பேச விடவில்லை; மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


பா.ஜனதா முதல்-மந்திரிகள் மட்டுமே பேச அனுமதி; பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எங்களை பேச விடவில்லை; மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 May 2021 5:42 PM GMT (Updated: 20 May 2021 5:42 PM GMT)

கொரோனா விவகாரம் குறித்து பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சி முதல்-மந்திரிகளை பேச விடவில்லை. பா.ஜனதா முதல்-மந்திரிகள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

வெறும் பொம்மைகள்
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கொரோனா விவகாரம் குறித்து பிரதமர் மோடி, இன்று (நேற்று) காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, நானும், இதர எதிர்க்கட்சி முதல்-மந்திரிகளும் பேச அனுமதிக்கப்படவில்லை. பா.ஜனதா முதல்-மந்திரிகள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டனர்.மற்றவர்கள் வெறும் பொம்மைகள் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் நாங்கள் அவமதிக்கப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும் உணர்ந்தோம். இது, நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை தகர்க்கும் முயற்சி. நாங்கள் சொல்வதை கேட்க இயலாத அளவுக்கு பாதுகாப்பற்ற நிலையில் பிரதமர் இருக்கிறார். மொத்தத்தில், இந்த கூட்டம் சூப்பர் தோல்வியாக முடிந்து விட்டது.

கருப்பு பூஞ்சை பற்றி கேட்கவில்லை
மேற்கு வங்காளத்தில் கொரோனாவை எப்படி சமாளிக்கிறீர்கள் என்றோ, தடுப்பூசி, ஆக்சிஜன் போதிய அளவுக்கு கையிருப்பு இருக்கிறதா என்றோ பிரதமர் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. கருப்பு பூஞ்சை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. மேற்கு வங்காளத்தில் 4 பேருக்கு கருப்பு பூஞ்சை வந்திருக்கிறது.நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக பிரதமர் கூறியுள்ளார். பிறகு ஏன் சாவு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது? கொரோனாவை ஒடுக்க மத்திய அரசிடம் உரிய திட்டம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமருக்கு கடிதம்

இதற்கிடையே, பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தொற்று தாக்க அதிக வாய்ப்புள்ள வங்கி ஊழியர்கள், ரெயில்வே, விமான நிலைய ஊழியர்கள், பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் கொள்கையில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை.ஆனால், நாங்கள் மேற்கண்டவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்காக குறைந்தபட்சம் 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தாமதமின்றி இதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story