கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மருந்து ஒதுக்கீடு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 May 2021 7:04 AM GMT (Updated: 22 May 2021 7:12 AM GMT)

கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின்-பி மருந்து கூடுதலாக 23,680 குப்பிகள் மாநிலங்களுக்கு, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வைரஸ் பரவலுக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை தொற்றும் பரவி வருகிறது. இந்த தொற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலும் இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆம்போடெரிசின் பி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்படி டெல்லி, தெலுங்கானா, ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கோவா, உத்தர பிரதேசம், குஜராத், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஆம்போடெரிசின் பி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின்-பி மருந்து கூடுதலாக 23,680 குப்பிகள் மாநிலங்களுக்கு, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு அதிகளவில் ஆம்போடெரிசின்-பி மருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 140 மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இதுவரை 8,848 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Next Story