மே.வங்காள வன்முறை: விசாரணை குழு அமையுங்கள் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 2 ஆயிரம் பெண் வழக்கறிஞர்கள் கடிதம்


மே.வங்காள வன்முறை: விசாரணை குழு அமையுங்கள் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 2 ஆயிரம் பெண் வழக்கறிஞர்கள் கடிதம்
x
தினத்தந்தி 24 May 2021 2:36 PM GMT (Updated: 24 May 2021 2:36 PM GMT)

மேற்குவங்காள வன்முறை தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமையுங்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிக்கு 2 ஆயிரத்து 93 பெண் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

புதுடெல்லி,

மேற்குவங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்குவங்காள முதல்மந்திரியாக பதவியேற்றுள்ளார்.

தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றதை தொடர்ந்து பாஜக கட்சினர், குடும்பத்தினர், வீடுகள், அலுவலகங்கள், கடைகள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

மேற்குவங்காளத்தின் பல்வேறு மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்குவங்காள அரசு தெரிவித்துள்ளது. ஆனால், வன்முறை சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு குழுவினர் மேற்குவங்காளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆய்வு செய்தனர். அதேபோல், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மக்களையும் மேற்குவங்காள கவர்னர் ஜக்தீப் தங்கரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேரில் பார்வையிட்டு கள நிலவரத்தை ஆய்வு செய்தார்.

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற வன்முறை தொடர்பாக சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமனா மற்றும் துணை நீதிபதிகளுக்கு நாடு முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்து 93 பெண் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விரைவு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கடிதம் தொடர்பாக வெளியான அறிக்கையில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை கூட விட்டுவைக்கவில்லை. அவர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேற்கு வங்காளத்தில் மனித உரிமை மீறல்களின் தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாக நாட்டின் உச்சநீதிமன்றத்தின் உடனடி கவனம் தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story