தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் கேரள சட்டசபையில் 136 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு; பினராயி விஜயன், உம்மன்சாண்டியும் பொறுப்பேற்றுக் கொண்டனர்


தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் கேரள சட்டசபையில் 136 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு; பினராயி விஜயன், உம்மன்சாண்டியும் பொறுப்பேற்றுக் கொண்டனர்
x
தினத்தந்தி 24 May 2021 8:27 PM GMT (Updated: 24 May 2021 8:27 PM GMT)

தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் கேரள சட்டசபையில் 136 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். முதல்-மந்திரி பினராயி விஜயன், உம்மன்சாண்டியும் பொறுப்பேற்றனர்.

எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு
கேரளாவில் நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றது. தொடர்ந்து 2-வது முறையாக முதல்-மந்திரியாக பினராயி விஜயன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து 20 மந்திரிகளும் பதவி ஏற்றனர்.இந்தநிலையில் 15-வது கேரள சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக சபாநாயகர் ரகீம் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்.முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் சதீஷன் ஆகியோரும் அடுத்தடுத்து பதவிபிரமாணம் எடுத்துக் கொண்டனர். மொத்தம் 136 எம்.எல். ஏக்கள் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இன்று சபாநாயகர் தேர்வு
இன்று நடைபெறும் கூட்டத்தில் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. கேரள சட்டசபையில் இடது ஜனநாயக முன்னணிக்கு (எல்.டி.எப்) மெஜாரிட்டி பலம் இருப்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எம்.பி.ராஜேஷ் சபாநாயகராகவும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சிட்டயம் கோப குமார் துணை சபாநாயகராகவும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.இவர்கள் இருவரும் நேற்று சட்டசபை செயலாளர் முன்னிலையில் மனு தாக்கல் செய்தனர். அதேபோல் எதிர்க் கட்சிகள் சார்பில் சபாநாயகராக போட்டியிடும் விஷ்ணுநாத் எம்.எல்.ஏ.வும் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

பினராயி விஜயனுக்கு பிறந்த நாள்
எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்கு முன்பு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று தனது 76-வது பிறந்த நாள் விழாவை மனைவி கமலா மற்றும் குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடினார்.மேலும் அவருக்கு, எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

Next Story