ஆட்சி பொறுப்பேற்று 7 ஆண்டு நிறைவு; மோடி அரசு மீது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தாக்கு


ஆட்சி பொறுப்பேற்று 7 ஆண்டு நிறைவு; மோடி அரசு மீது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தாக்கு
x
தினத்தந்தி 24 May 2021 11:46 PM GMT (Updated: 24 May 2021 11:46 PM GMT)

ஆட்சி பொறுப்பேற்று 7 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் மோடி ஆட்சியை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து உள்ளன.

ஆட்சி நிறைவு
நாடு முழுவதையும் கொரோனா 2-வது அலை ஆட்டிப்படைத்துவரும் இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி 
பொறுப்பேற்றதை அடுத்து நாளை (புதன்கிழமை) 2-ம் ஆண்டு ஆட்சியை நிறைவு செய்கிறது. மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தொடர்ந்து 7 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இந்தநிலையில் 7 ஆண்டுகால ஆட்சியில் பா. ஜனதாவின் படுதோல்வியை மராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் காட்கில் பட்டியலிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ஆற்றில் உடல் வீச்சு
2014-ம் ஆண்டு குஜராத் மாடல் ஆட்சி என்று கூறி ஆட்சிக்கு வந்த பா.ஜனதா கொரோனா பரவல் காரணமாக அம்பலமாகி உள்ளது. ஐகோர்ட்டு கூட குஜராத்தின் கையாலாகாத தன்மையை சுட்டிக்காட்டி உள்ளது. பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் உத்தரபிரதேசத்தில் சுடுகாட்டில் இடம் இல்லாமல் திறந்தவெளியில் இறுதி சடங்குள் செய்யப்படுவது, ஆற்றில் உடல்கள் வீசப்படுவது போன்ற சம்பவங்களை சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. கோவா மாநிலம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்புகளை சந்தித்து வருகிறது. பா.ஜனதா ஆளும் மற்றொரு மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் நிலைமை இருண்டதாக காட்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய மாதிரி ஆட்சி
இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், “வருங்காலத்தில் இந்திய மாதிரி ஆட்சியை யாரும் கையாள மாட்டார்கள். கொரோனாவுக்கு பலியானவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்படுவது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறப்பது, தடுப்பூசி கையிருப்பு இல்லாத நிலையில் தடுப்பூசி திட்டத்தை அறிவிப்பது. இத்தகைய மாதிரிகள் யாராலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது” என்றார்.

Next Story