புதுச்சேரியில் நியமிக்கப்பட்டவர்கள் உள்பட புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்பு; தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்


புதுச்சேரியில் நியமிக்கப்பட்டவர்கள் உள்பட புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்பு; தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்
x

புதுச்சேரியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் உள்பட புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை (புதன்கிழமை) பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

புதுவை மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ந் தேதி நடந்தது.

என்.ஆர்.காங்.- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி
தேர்தல் முடிவில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்-அமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த 7-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார்.இதையடுத்து தற்காலிக சபாநாயகர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சரவை பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக 
எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சரவை பதவி ஏற்பு தள்ளிப்போனது.

தற்காலிக சபாநாயகர்
முதல்-அமைச்சர் ரங்கசாமி குணமடைந்து கடந்த 17-ந் தேதி புதுச்சேரி திரும்பினார். டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஒருவாரமாக தனது வீட்டிலேயே அவர் தனிமையில் இருந்து வந்தார்.இந்தநிலையில் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ.வை நியமிக்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.இதையடுத்து லட்சுமிநாராயணன் நாளை (புதன்கிழமை) தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றுக் கொள்கிறார். இந்த பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ளது. விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

முக்கிய பிரமுகா்களுக்கு அழைப்பு
தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் விழாவில் கலந்து கொள்ள முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இது குறித்து சட்டசபை செயலாளர் முனுசாமி அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு
புதுவை 15-வது சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லட்சுமிநாராயணனுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பதவி பிரமாணம் செய்து வைப்பார். பதவியேற்பு நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடைபெறும்.அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் அறையில் 15-வது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமனம் செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு தற்காலிக பேரவைத்தலைவர் உறுதிமொழி அல்லது பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சரவை
அடுத்த கட்டமாக தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் சட்டமன்றத்தை கூட்டி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலை நடத்துவார். எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்ற பின்னர் புதுச்சேரி முதல்-அமைச்சர் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story