கொரோனா டூல்கிட் விவகாரம்; 11 மத்திய மந்திரிகளின் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; ‘டுவிட்டர்’ நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடிதம்


கொரோனா டூல்கிட் விவகாரம்; 11 மத்திய மந்திரிகளின் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; ‘டுவிட்டர்’ நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடிதம்
x
தினத்தந்தி 25 May 2021 6:19 PM GMT (Updated: 25 May 2021 6:19 PM GMT)

கொரோனா டூல்கிட் விவகாரத்தில் 11 மத்திய மந்திரிகளின் டுவிட்டர் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

வழக்குப்பதிவு
கொரோனா விவகாரத்தில் இந்தியாவின் கவுரவத்தையும், பிரதமர் மோடியின் நற்பெயரையும் களங்கப்படுத்தும்வகையில் காங்கிரஸ் கட்சி டூல்கிட் ஒன்றை தயாரித்ததாக பா.ஜனதா சமீபத்தில் குற்றம் சாட்டியது. அதை டுவிட்டரில் வெளியிட்டது.ஆனால், அது போலி ஆவணம் என்று காங்கிரஸ் விளக்கம் அளித்தது. போலி ஆவணம் தயாரித்ததாக சத்தீ்ஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், முன்னாள் முதல்-மந்திரி ராமன்சிங், பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

2 காங்கிரஸ் தலைவர்களுக்கு நோட்டீஸ்
மேலும், டெல்லி போலீசாரிடமும் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. கொரோனா டூல்கிட் தொடர்பாக காங்கிரசுக்கு எதிராக சம்பித் பத்ரா வெளியிட்ட டுவிட்டர் பதிவை ‘சித்தரிக்கப்பட்ட செய்தி’ என்று ‘டுவிட்டர்’ நிறுவனம் முத்திரை குத்தியது.அதையடுத்து, என்ன தகவல் அடிப்படையில் அந்த முத்திரை குத்தப்பட்டது என்பதை தெரிவிக்குமாறு ‘டுவிட்டர்’ நிறுவனத்துக்கு டெல்லி போலீசார் நேற்று முன்தினம் நோட்டீஸ் அளித்தனர்.மேலும், காங்கிரஸ் அளித்த புகார் குறித்து விசாரிக்க வேண்டி இருப்பதால், விசாரணைக்கு வருமாறு காங்கிரஸ் சமூக வலைத்தள பிரிவு தலைவர் ரோகன் குப்தா, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ராஜீவ் கவுடா ஆகியோருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

டுவிட்டருக்கு கடிதம்
இந்தநிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் சட்டப்பிரிவு தலைவர் விஜயா கட்டே, துணைத்தலைவர் ஜிம் பேகர் ஆகியோருக்கு காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அரசியல் ஆதாயத்துக்காக, காங்கிரசுக்கு எதிரான டூல்கிட்டை போலியாக பா.ஜனதா தலைவர்கள் தயாரித்துள்ளனர். பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ராவின் டுவிட்டர் பதிவை ‘சித்தரிக்கப்பட்ட செய்தி’ என்று டுவிட்டர் முத்திரை குத்தி உள்ளது.அதே பதிவை மத்திய மந்திரிகள் ஸ்மிரிதி இரானி, பியூஸ் கோயல், கிரிராஜ்சிங், ரவிசங்கர் பிரசாத், பிரகலாத் ஜோஷி, தர்மேந்திர பிரதான், ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், தாவர்சந்த் கெலாட், ஹர்ஷவர்தன், முக்தார் அப்பாஸ் நக்வி, கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகிய 11 மத்திய மந்திரிகளும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.

முத்திரை
அவர்கள் மத்திய மந்திரிகள் என்பதால், அவற்றை பொதுமக்கள் நம்ப வாய்ப்புள்ளது. சாதாரண மக்கள் போலியான செய்தியை வெளியிட்டால், அதன் மீது ‘போலி’ என்ற முத்திரையை ‘டுவிட்டர்’ குத்துவது வழக்கம்.அதே அளவுகோலை மத்திய மந்திரிகளுக்கும் கடைபிடிக்க வேண்டும். டூல்கிட் தொடர்பான 11 மத்திய மந்திரிகளின் பதிவுகள் மீது ‘சித்தரிக்கப்பட்ட செய்தி’ என்று முத்திரை குத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story