சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 297 மாணவர்கள் கடிதம்


சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 297 மாணவர்கள் கடிதம்
x
தினத்தந்தி 25 May 2021 8:51 PM GMT (Updated: 25 May 2021 8:51 PM GMT)

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 297 மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

பொதுத்தேர்வை நடத்த வேண்டாம்

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 297 மாணவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.தற்போதைய கொரோனா சூழலில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டாம். மேலும் மாற்று முறையில் மதிப்பெண்களை கணக்கீடு செய்ய வேண்டும்.

தொற்று அபாயம்
ஏனெனில் இதுவரை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை.மேலும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதால் பல மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தேர்வு நடத்தும்பட்சத்தில் அவர்கள் மீண்டும் திரும்பி வருவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.தேர்வுக்காக மாணவர்கள் பயணம் செய்யும் சூழல் அமையும்போது, அது மாணவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தாருக்கும், வீட்டில் உள்ள முதியோருக்கும் கொரோனா தொற்று ஆபத்தை உருவாக்கும்.பல பள்ளிகள் கொரோனா சிகிச்சை 
மையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. அவற்றை தேர்வு மையமாக மாற்றும்போது கொரோனா கட்டுப்பாடு பகுதியில் உள்ளவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டும்
இதை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு இதுபோன்ற சூழலில் கோர்ட்டு தலையிட்டு தேர்வுகளை ரத்து செய்ததுடன், மதிப்பெண் வழங்க மாற்று முறையைப் பின்பற்ற அறிவுறுத்தியது.எனவே அதுபோன்று நடப்பு ஆண்டும் சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை மேற்கொண்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரியுள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story