புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவியேற்பு


புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவியேற்பு
x
தினத்தந்தி 26 May 2021 5:46 AM GMT (Updated: 26 May 2021 5:46 AM GMT)

தற்காலிக சபாநாயகருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதுச்சேரி, 

புதுவை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ந் தேதி நடந்தது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் (10 இடங்கள்), பா.ஜ.க. (6 இடங்கள்) கூட்டணி மொத்தம் 16 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. தி.மு.க.-6, காங்கிரஸ்- 2, சுயேச்சைகள் -6 இடங்களையும் பிடித்தனர்.

என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த 7-ந் தேதி கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று கடந்த 17-ந் தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுவை திரும்பினார். வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதன் காரணமாக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு தள்ளிப்போனது.

இந்நிலையில் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் இன்று (புதன் கிழமை) பதவி ஏற்றுக்கொண்டார். கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அவருக்கு தற்காலிக சபாநாயகராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்துக்கு வந்த லட்சுமி நாராயணன் அங்கு தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். 

அதன்பின் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பதற்காக சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டு அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆனால் இந்த முறை தொற்று பரவலை தடுக்கும் விதமாக சபாநாயகர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடக்கிறது. முதலில் முதல்-அமைச்சர் ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டார். 

அதைத்தொடர்ந்து மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இறுதியாக நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். 

முன்னதாக பதவியேற்க வரும் எம்.எல்.ஏ.க்களுடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சட்டசபைக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Next Story